‘மத்திய அரசின் வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கான கட்டணம் உயர்த்தப்படும்’ என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அறிவித்தார்.
உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கான கூட்டம் சென்னை நேற்று நடந்தது. தமிழக பாஜக சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பேசியதாவது:-
மத்திய அரசின் வழக்கறிஞர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது, வழக்குகளில் ஆஜராவதற்கான கட்டணத்தை உயர்த்துவது, உயர் நீதிமன்றத்தில் அவர்களுக்கு தனி அறை ஆகிய கோரிக்கைகள் இங்கே முன்வைக்கப்பட்டன. மத்திய அரசு வழக்கறிஞர்களுக்கான தனி அறை ஒதுக்குவது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஆலோசித்தேன். அதற்கான இடவசதி இல்லை என்று அவர் சொன்னார்.
தற்போது இங்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பான 3 அறிவிப்புகளை வெளியிடுகிறேன். அவற்றை சென்னையில் வெளியிடுவது பொருத்தமாக இருக்கும். மத்திய அரசின் வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். வழக்குகளில் ஆஜராவதற்கான கட்டணம் 10 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. எனவே, கட்டணம் உயர்த்தப்படும்.
அதேபோல், சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு தனி அறை வசதி ஏற்படுத்தப்படும். அறை வசதி இல்லையென்றால் புதிதாக கட்டிடம் கட்டி அறை வசதி செய்து கொடுக்கப்படும். மத்திய – மாநில அரசு கூட்டுத் திட்டத்தின்கீழ் இதற்கான நிதியில் 60 சதவீதத்தை மத்திய அரசு வழங்கும்.
மேலும், மத்திய அரசின் நோட்டரி பப்ளிக் பட்டியலை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்துள்ளீர்கள். அதற்கு விண்ணப்ப நடைமுறைகள் உள்ளன. தேர்வு நடத்தப்பட வேண்டும். விரைவில் அந்த பட்டியலும் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.
நாடு முழுவதும் வழக்கறிஞர்களுக்கு ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு வழங்கும் புதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்துவருகிறது. விரைவில் வழக்கறிஞர்களுக்கு காப்பீட்டு திட்டமும் அறிவிக்கப்படும். இதை மோடி அரசு செய்யாமல் வேறு எந்த அரசு செய்யும்? இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் பேசும்போது, “மத்திய அரசின் வழக்குகளில் ஆஜராக நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்களுக்கு வாழ்த்துகள். வழக்கறிஞர்கள் மிகவும் விழிப்புணர்வோடும், கவனத்துடனும் இருக்க வேண்டும். உங்களுக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசும்போது, “பிரச்சினைகளை உருவாக்குவதும் வழக்கறிஞர்கள்தான். பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பவர்களும் வழக்கறிஞர்கள்தான். மத்திய அரசின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகும் உங்களைப் பார்த்தவுடன் எனக்கு தைரியமும், தெம்பும் வந்திருக்கிறது” என்றார்.
முன்னதாக, பாஜக மாநில துணை தலைவர் வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ் பேசும்போது, தங்களது 3 கோரிக்கைகளையும் மேடையிலேயே நிறைவேற்றியதற்காக மத்திய அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மூத்த வழக்கறிஞர்கள் சஞ்சய் ராமசாமி, ராகுல் மனோகர், பாஜக தேசிய மகளிர் அணியின் தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ, தமிழக பாஜக வழக்கறிஞர் அணி தலைவர் வணங்காமுடி, செயலாளர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.