சென்னை அண்ணா பல்கலைக்கழக பாலியல் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரன் வழக்கில் மே 28-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படுவதாக சென்னை மகளிர் நீதிமன்றம் தெரிவித்தது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த பெண்ணின் புகாரை வைத்து ஞானசேகரன் என்ற பிரியாணி கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
அவரிடமும், பாதிக்கப்பட்ட மாணவியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு, ஞானசேகரனுக்கு எதிராக மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என ஞானசேகரன் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஞானசேகரன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி ஞானசேகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு காவல் துறை தரப்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
அதில் ஞானசேகரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு அனைத்து முகாந்திரங்களும் உள்ளது. இவர்தான் குற்றம் புரிந்துள்ளார் என்பதற்கு அனைத்து ஆதாரங்களும் உள்ளதால் ஞானசேகரனை வழக்கில் இருந்து விடுவிக்கக் கூடாது என கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து அவருடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் பாலியல் வழக்கின் தீர்ப்பு வரும் மே 28ஆம் தேதி வழங்கப்படுகிறது என சென்னை சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எந்த மாதிரியான தீர்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த ஞானசேகரன் மீது திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தனிமையான இடத்தில் இருக்கும் ஆண், பெண்ணை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபடுவதையே வாடிக்கையாக கொண்டதாக சொல்லப்படுகிறது. இவர் பிரியாணி கடை வைத்திருந்ததாக தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய கோரி அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையான போராட்டங்களை நடத்தியிருந்தன. அண்மையில்தான் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.