தமிழகத்தில் காலியாக உள்ள 63 ஆயிரம் சத்துணவுப் பணியாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி கூறினார்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 16-வது மாநில மாநாடு திண்டுக்கல்லில் நடைபெற்றது. மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் சுகந்தி வரவேற்றார். இதில் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி பேசியதாவது:-
மிகக் குறைந்த ஊதியத்தில் பணி செய்யக்கூடிய சத்துணவு ஊழியர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு ஊழியர்களுக்கும், காலமுறை ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியான வரி போடுவோம் என்கிறது அரசு. இதில்தான் உழைப்புச் சுரண்டல் இருக்கிறது. காலியாக உள்ள 63 ஆயிரம் சத்துணவுப் பணியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், பகுதி நேர சத்துணவுப் பணியாளர்களை முழு நேர ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு குடும்ப நிதியாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். ஒட்டுமொத்த பணிக்கொடையாக சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.10 லட்சம், சமையலர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களில் சிறப்பு காலமுறை ஊதியம் மூலம் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.