நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றது வரவேற்கத்தக்கது: எச்​.​ராஜா!

டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றது வரவேற்கத்தக்கது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறினார்.

புதுக்கோட்டையில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் அனைத்து குற்றச் செயல்களுக்கும் காரணமாக போதைப் பொருள் உள்ளது. போதைப் பொருட்களால் இளைஞர்கள் சீரழிகின்றனர். இந்தியாவில் போதைப்பொருள் அதிகம் விற்பனை செய்யப்படும் மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் சிந்தடிக் டிரக் அதிகமாக புழக்கத்தில் இருந்தபோதும், இதுவரை ஒரு கிராம்கூட பறிமுதல் செய்யப்படவில்லை.

சிந்தடிக் ட்ரக் விற்பவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் கலந்துகொண்டு, பிரதமரை சந்தித்ததை வரவேற்கிறேன். அமலாக்கத் துறை சோதனைக்கு பயந்துதான் தமிழக முதல்வர் டெல்லி சென்றிருப்பதாக முன்னாள் முதல்வர் பழனிசாமி கூறியிருந்தால், சரியாகத்தான் இருக்கும். ஏனெனில், அவர் அனுபவம் நிறைந்த அரசியல்வாதி.

தமிழகத்தில் தொழில் தொடங்க வருவோரிடம் லஞ்சம் கேட்கப்படுவதால், அவர்கள் யாரும் தொழில் தொடங்க முன்வருவதில்லை. மாநிலத் தலைவராக அண்ணாமலை இருந்தபோது பாஜக எப்படி இருந்ததோ, தற்போதும் அப்படியேதான் உள்ளது. எந்தக் குறையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.