பாகிஸ்தானுக்கான நிதியுதவியை தடுக்க வேண்டும்: ஒவைசி வலியுறுத்தல்!

தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தானை கிரே பட்டியலில் சேர்க்க உதவ வேண்டும் என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி பஹ்ரைன் அரசிடம் வலியுறுத்தி உள்ளார்.

பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்து உலக நாடுகளிடம் எடுத்துரைக்க, அனைத்து கட்சி எம்பிக்கள் அடங்கிய 7 குழுக்களை மத்திய அரசு நியமித்து உள்ளது. இக்குழுவினர் தனித்தனியாக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இதில், பாஜக எம்.பி. வைஜெயந்த் பாண்டா தலைமையிலான குழு சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன் மற்றும் அல்ஜீராயா ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளது.

பஹ்ரைன் அரசின் உயர் அதிகாரிகளை இக்குழு சந்தித்துப் பேசியது. அப்போது, குழுவில் இடம்பெற்றுள்ள ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி பேசியதாவது:-

எங்கள் நாடு பல ஆண்டுகளாக தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருவதை உலக நாடுகள் நன்கு அறியும். இதனால் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பக்கத்து நாடான பாகிஸ்தானில் இருந்துதான் இந்தப் பிரச்சினை உருவாகிறது. தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவு தருவதையும் நிதியுதவி செய்வதையும் ஊக்குவிப்பதையும் பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளாதவரை இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது.

சமீபத்தில் காஷ்மீரின் பகல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த படுகொலையின் துயரத்தை சிந்தித்துப் பாருங்கள். திருமணமான 7-வது நாளில் ஒரு பெண் கணவனை இழந்தார். மற்றொரு பெண் திருமணமான இரண்டு மாதங்களில் கணவனை இழந்தார்.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் வான் வழியாக துல்லிய தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, தோற்றுப் போன பாகிஸ்தான் ராணுவம் ஏவிய ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் ஏவியது. ஆனால் அவற்றை இந்திய விமானப்படை நடுவானிலேயே இடைமறித்து தாக்கி அழித்தது.

இந்தியாவில் அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடு உள்ளன. ஆனால் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்பதை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும். சர்வதேச பண மோசடி மற்றும் தீவிரவாத நிதியுதவி கண்காணிப்பு அமைப்பான, நிதி நடவடிக்கை பணிக் குழுவின் (எப்ஏடிஎப்) சாம்பல் நிற (கிரே) பட்டியலில் பாகிஸ்தானை சேர்க்க பஹ்ரைன் அரசு உதவ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.