மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டம் ரத்து செய்யப்படவில்லை: அன்பில் மகேஷ்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டம் ரத்து செய்யப்படவில்லை என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கப்படுகிறது. பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது. கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படவில்லை. சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் மாணவர்களுக்கு இலவச டேப் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து லேப்டாப் வழங்கப்படாததால் தமிழக அரசு இந்த திட்டத்தை ரத்து செய்துவிட்டதா என்ற கேள்வி எழுந்தது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழி பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படவில்லை. திமுக தேர்தல் வாக்குறுதியில் இலவச டேப் வழங்கப்படும் என தெரிவித்திருந்தோம். இது தொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினோம். அப்போது டேப்பை விட லேப்டாப் வழங்கினால் மாணவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என தெரிவித்ததால் லேப்டாப் வழங்குவதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே கொடுக்காமல் இருந்த மாணவர்களுக்கும் சேர்த்து 11 லட்சம் லேப்டாப்கள் வழங்கப்பட உள்ளன. அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.