கருமுட்டை எடுத்த விவகாரத்தில் சேலம் சுதா மருத்துவமனைக்கு சீல்!

ஈரோட்டில் சிறுமியிடம் சட்ட விரோதமாக கருமுட்டை எடுத்த விவகாரம் விஸ்வரூபம் ஆகி இருக்கும் நிலையில் அதில் தொடர்புடைய 4 மருத்துவமனைகளை உடனே மூட உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.

ஈரோட்டத்தைச் சேர்ந்த 16 வயதான சிறுமியிடம் சட்ட விரோதமாக கருமுட்டை தானம் பெற்ற சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்தது. இந்த சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட அதிகாரிகள் தலைமையில் ஆன குழுவின் விசாரனையும் விருவிருப்பாக நடந்து வந்தது. சிறுமியிடம் அதிகாரிகள் நடத்திய விசாரனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சிறுமியின் தாய் அவரின் கள்ளகாதலன், இடைத்தரகராக செயல்பட்ட பெண் போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்தவர் என 4 பேர் கைது செய்யப்பட்டனர்.அதே நேரம் சட்ட விரோதமாக சிறுமியிடம் இருந்து பலமுறை கருமுட்டை பெற்று அதனை விற்று வந்ததும் உறுதியான நிலையில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் போலீசார் விசாரனையை தீவிர படுத்தினர். இதன் பேரில் ஈரோடு மற்றும் சேலத்தில் உள்ள சுதா மருத்துவமனை, ஓசுரில் உள்ள விஜய் மருத்துவமனை, பெருந்துறையில் உள்ள ராமபிரசாத் மருத்துவமனை மற்றும் திருப்பதில் உள்ள கருத்தரிப்பு மையம் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனை என 6 மருத்துவமனைகள் கருமுட்டை விவகாரத்தில் ஈடுப்பட்டது என தெரியவந்தது.

இதையடுத்து இதில் தொடர்புடைய ஈரோடு சுதா மருத்துவமனை, சேலம் சுதா மருத்துவமனை, ஓசுர் விஜய் மருத்துவமனை, பெருந்துறை ராமபிரசாத் மருத்துவமனை ஆகிய 4 மருத்துவமனைகளை மூட உத்தரவு தெரிவிக்கபட்டுள்ளது. இங்கு செயல்பட்டு வரும் ஸ்கேன் சென்டர்களை உடனடியாக மூடவும் 15 நாட்களுக்குள் அங்கு சிகிச்சை பெற்று வருவோரை டிஸ்சார்ஜ் செய்துவிட்டு மருத்துவமனைகளை நிரந்தரமாக மூடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அந்தந்த மாவட்ட இணை இயக்குநர்களின் மூலம் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக ஆவணங்களை நீதிமன்றங்களில் சமர்பித்து அவர்களுக்கு தண்டனை பெற்று தருவதற்குரிய வகையில் இவர்களை செயல்பட செய்வது, இந்த நடவடிக்கைகள் மூலம் தமிழகத்தில் இருக்கிற மற்ற செயற்கை கருத்தரிப்பு மையங்களும் மனிதநேயத்தோடும் மருத்துவ சேவை என்பது ஒரு மகத்தான சேவை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டு வெளியிட்டுள்ளது . இதில் சேலம் மற்றும் ஈரோட்டில் இயங்கி வந்த சுதா மருத்துவமனை மற்றும் விஜய் மருத்துவமனை ஆகியவை முதல்வர் மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வந்த சூழலில் அவை அந்த பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாகவும் கூறினார்.

மேலும் இந்த விவகாரத்தில் ஈடுபட்டுள்ள வெளி மாநிலங்களை சார்ந்த இரண்டு மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் துறையின் செயளாலர் கடிதம் எழுதியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் ஈடுபட்டுவர்களுக்கு அதிக பட்சமாக 50 லட்சம் ரூபாய் அபராதமும் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் கிடைக்க வாய்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் கருத்தரிப்பு மையங்கள் முறையாக செயல்பட வேண்டும் என்றும் கண்கானிப்பு தீவிரபடுத்தபடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் சேலம் சுதா மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது. மருத்துவமனை இணை இயக்குநர் நெடுமாறன் தலைமையிலான அதிகாரிகள் ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்தனர். 4 மருத்துவமனைகளில் உள்ள ஸ்கேன் சென்டர்களை உடனடியாக மூட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று உத்தரவிட்டிருந்தார்.