இங்கிலாந்தின் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்வில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனாக், நேற்று நடந்த 2வது சுற்று வாக்கெடுப்பில் 101 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
இங்கிலாந்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை அடுத்து, புதிய பிரதமர் செப்டம்பர் 5ம் தேதி தேர்வு செய்யப்படுவார் என்று கன்சர்வேடிவ் கட்சியின் தேர்வு குழு அறிவித்தது. புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான போட்டியில், ஜான்சனுக்கு எதிராக முதலில் பதவியை ராஜினாமா செய்த நிதியமைச்சர் ரிஷி சுனாக், வர்த்தக அமைச்சர் பென்னி மோர்டன்ட், வெளியுறவு செயலர் லிஸ் ட்ரஸ் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த முதல் சுற்று வாக்கெடுப்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனாக் 88 எம்பி.க்களின் ஆதரவை பெற்று வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து 2வது சுற்றுக்கு அவர் முன்னேறினார். இந்த வாக்கெடுப்பில் 18 வாக்குகள் பெற்று கடைசி இடத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜெரமி ஹண்ட், சுனாக்கிற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இந்நிலையில், நேற்று நடந்த 2வது சுற்று வாக்கெடுப்பில் சுனாக் 101 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
முதல் சுற்று வெற்றிக்குப் பிறகு சுனாக் அளித்த பேட்டியில், `விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதே முக்கிய பொருளாதார பிரச்னையாக உள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வரிகளை குறைக்கவில்லை, வரியை குறைப்பதற்காக தேர்தலில் வெற்றி பெற நினைக்கிறேன். வரி குறைப்பை கவனத்துடனும், கட்டுப்பாட்டுடனும் செயல்படுத்துவேன்,’ என்று தெரிவித்தார்.