ஏர் இந்திய விமான குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளி கனடாவில் சுட்டுக்கொலை!

1985-ம் ஆண்டு ஏர் இந்தியா விமான தகர்ப்பு சம்பவத்தில் விடுதலை செய்யப்பட்ட சீக்கிய தீவிவரவாதி ரிபுதமன்சிங் மாலிக், கனடாவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

1980களில் இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனிநாடு கோரி ஆயுதப் போராட்டம் நடைபெற்றது. காலிஸ்தான் என்ற பெயரிலான தனிநாடு கோரி நடத்தப்பட்ட ஆயுதப் போராட்டத்துக்கு பிந்தரன்வாலே தலைவராக இருந்தார். ஆனால் இந்தப் போராட்டத்தை பிரதமராக இருந்த இந்திரா காந்தி ராணுவ நடவடிக்கை மூலம் நிர்மூலமாக்கினார். பஞ்சாப் பொற்கோவிலுக்குள் பதுங்கி இருந்த பிந்தரன்வாலே உள்ளிட்ட காலிஸ்தான் தீவிரவாதிகள் அத்தனை பேரையும் ப்ளூ ஸ்டார் ராணுவ நடவடிக்கை மூலமாக அழித்தார் இந்திரா காந்தி. இந்த நடவடிக்கைக்கு பதிலாக, இந்திரா காந்தி அம்மையாரை அவரது சீக்கிய பாதுகாவலர்களே சுட்டுப் படுகொலை செய்தனர். இதனையடுத்து எஞ்சியிருந்த காலிஸ்தான் தீவிரவாதிகள், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பி ஓடினர்.

மேலும் 1985-ம் ஆண்டு உலகை அதிரவைத்த ஏர் இந்தியா விமான தாக்குதலை சீக்கிய தீவிரவாதிகள் நிகழ்த்தினர். 1985-ம் ஆண்டு கனடாவில் இருந்து டெல்லி நோக்கி ஏர் இந்தியாவின் கனிஷ்கா விமானம் வந்து கொண்டிருந்தது. இந்த விமானம் அட்லாண்டிக் கடல் மீது பறந்து கொண்டிருந்த போது பயங்கர குண்டுவெடிப்பால் வெடித்து சிதறியது. இதில் விமானத்தில் இருந்த 329 பேர் பலியாகினர். உலக அளவிலான விமான தாக்குதல்களில் இன்றளவும் கொடூரமானது இந்த தாக்குதல். இந்த பயங்கர விமானத் தாக்குதலை நடத்தியது சீக்கிய தீவிரவாதிகள்தான் என தெரியவந்தது. இது தொடர்பான வழக்கு கனடாவில் நடைபெற்றது. இவ்வழக்கில் இந்தர்ஜித்சிங் என்ற தீவிரவாதிக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ரிபுதமன்சிங் உள்ளிட்ட சிலர் விடுதலை செய்யப்பட்டார்.

இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ரிபுதமன்சிங், வான்கூவர் நகரில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் சீக்கியர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக கனடா அரசு விசாரணை நடத்தி வருகிறது.