சிசிடிவி காட்சிகளை வெளியிட்டால் வாக்காளர்களுக்கு ஆபத்து: தேர்தல் ஆணையம்!

வாக்குப் பதிவு மையங்களில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை 45 நாட்களுக்கு பிறகு அழித்து விடுமாறும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருப்பதை கடுமையாக கண்டித்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, இது ‘ஜனநாயகத்துக்கு விஷம்’ போன்றது” என்று சாடினார். இந்நிலையில் ராகுல் காந்திக்கு பதில் அளித்துள்ள தேர்தல் ஆணையம், வாக்குச் சாவடிகளில் இருந்து சிசிடிவி காட்சிகளை வெளியிடுவது வாக்காளர்களை ஆபத்தில் தள்ளக்கூடும் என்று கூறியுள்ளது.

மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல்களில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்ததாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார். இந்த விவகாரத்தில் உண்மையை அறிவதற்காக, வாக்காளர் பட்டியல்கள், வாக்கெடுப்புத் தரவுகள் மற்றும் வீடியோ காட்சிகளை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தி வருகிறார். இந்த சூழலில் தேர்தல் முடிவு தொடர்பான தீர்ப்பை எதிர்த்து 45 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படாவிட்டால், சிசிடிவி, வெப்காஸ்டிங் மற்றும் வீடியோ காட்சிகளை அழிக்குமாறு மாநிலத் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது.

மே 30 அன்று மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் எழுதிய கடிதத்தில், “தேர்தலின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள், சிசிடிவி மற்றும் வெப்காஸ்டிங் வீடியோ பதிவுகள் போன்றவற்றை பதிவு செய்வது தொடர்பான வழிமுறைகளை வெளியிட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்திருந்தது. அதில் தேர்தலில் போட்டியிடாதவர்கள் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களையும், தீங்கிழைக்கும் செய்திகளையும் பரப்புவதற்காக தேர்தலின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படடங்களை தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். இது எந்தவொரு சட்டப்பூர்வ முடிவுக்கும் வழிவகுக்காது. அத்தகைய பதிவுகளை தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் சூழலுக்கு வெளியே பயன்படுத்துவதன் மூலம் மறு ஆய்வு செய்ய வழிவகுத்திருக்கிறது. பல்வேறு கட்டங்களில் சிசிடிவி தரவு, வலை ஒளிபரப்பு தரவு மற்றும் தேர்தல் செயல்முறைகளின் புகைப்படம் எடுத்தல் ஆகியவை 45 நாட்களுக்குப் பாதுகாக்கப்படும். தேர்தல் முடிவை எதிர்த்து 45 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படாவிட்டால், அந்தத் தரவுகளை அழிக்கலாம்” இவ்வாறு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நாடாளுமன்ற மக்களை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி,கடுமையாக கண்டனம் தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் வடிவில் வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் மறுக்கிறது. மேலும், வாக்குப் பதிவு மையங்களில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை 45 நாட்களுக்கு பிறகு அழித்து விடுமாறும் தற்போது உத்தரவிட்டுள்ளது. இது ஆதாரங்களை அழிக்கும் செயல் ஆகும். இதன்மூலம் வெற்றியை முன்கூட்டியே தீர்மானித்திருப்பது தெளிவாக தெரிகிறது. இந்த செயல் ஜனநாயகத்துக்கு விஷம் போன்றது” என விமர்சித்தார்.

இந்நிலையில் ராகுல் காந்திக்கு பதில் அளிக்கும் வகையில் விளக்கம் அளித்த இந்திய தேர்தல் ஆணையம், வாக்குச் சாவடிகளில் இருந்து சிசிடிவி காட்சிகளை வெளியிடுவது வாக்காளர்களை ஆபத்தில் தள்ளக்கூடும் என்று கவலை தெரிவித்துள்ளது. தேர்தல் தொடர்பான சிசிடிவி காணொளிகள் வெளியிடப்பட்டால், அரசியல் கட்சிகள் அல்லது குழுவினருக்கு யார் வாக்களித்தார்கள், யார் வாக்களிக்கவில்லை என்பது தெரியும் என்று தெரிந்துவிடும் என்றும், இது அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டோம் என்றும், வாக்காளர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு மிக முக்கியமானது என்றும் நீதிமன்ற உத்தரவின் பேரில் தவிர, மற்ற எந்த சூழலிலும் பொதுவெளியில் தேர்தல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியிடப்படாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறியுள்ளது.