இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல்: ட்ரம்ப்!

இஸ்ரேல் – ஈரான் இடையிலான 12 நாள் யுத்தம், அடுத்த 24 மணி நேரத்தில் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் வெளியிட்ட தகவலில், “அனைவருக்கும் வாழ்த்துகள்! இஸ்ரேல் – ஈரான் இடையே 12 மணி நேரத்தில் (தோராயமாக 6 மணி நேரத்தில் இஸ்ரேல் மற்றும் இரான் தங்களுடைய இறுதி மிஷன்களை நிறைவு செய்த பிறகு) முழுமையான போர் நிறுத்தம் ஏற்படும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த கட்டத்தில் போர் முடிந்ததாகக் கருதப்படும்.

அதிகாரபூர்வமாக, ஈரான் இந்த போர் நிறுத்தத்தை தொடங்கும். 12-வது மணி நேரத்தில், இஸ்ரேல் இந்த போர் நிறுத்தத்தை தொடங்கும். 24-வது மணி நேரத்தில், இந்த 12 நாள் போரின் அதிகாரபூர்வ முடிவு, உலகத்தால் வரவேற்கப்படும். ஒவ்வொரு போர் நிறுத்தத்தின் போதும், மறுபக்கம் அமைதியும் மதிப்பும் நிலவும். எல்லாம் சரியாக நடக்கும் என்ற அனுமானத்தில், இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் இந்த 12 நாள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு சகிப்புத்தன்மை, தைரியம் மற்றும் புத்திசாலித்தனம் பெற்றதற்கு நான் வாழ்த்துகிறேன்.

இது பல ஆண்டுகளாக நடந்து, முழு மத்திய கிழக்கையும் அழித்திருக்கக் கூடிய ஒரு போர். ஆனால், அது நடக்கவில்லை. ஒருபோதும் அப்படி நடக்காது. கடவுள் இஸ்ரேலை ஆசிர்வதிப்பாராக. கடவுள் ஈரானை ஆசிர்வதிப்பாராக. கடவுள் மத்திய கிழக்கை ஆசிர்வதிப்பாராக, கடவுள் அமெரிக்காவை ஆசிர்வதிப்பாராக. கடவுள் உலகை ஆசிர்வதிப்பாராக” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், இந்த போர் நிறுத்த அறிவிப்வை இஸ்ரேல் மற்றும் ஈரான் தரப்பு உடனடியாக உறுதி செய்யவில்லை. இரு தரப்புமே தாக்குதல்களை தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், டிரம்பின் கூற்றுக்கு ஈரான் மறுப்பு தெரிவித்து உள்ளது. இதுபற்றி ஈரானின் வெளியுறவு துறை மந்திரி சையது அப்பாஸ் அராக்சி கூறும்போது, போர் நிறுத்தம் பற்றியோ, ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவோ எந்தவித ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை. இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. போரை நிறுத்துவது பற்றிய இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும். அந்த முடிவை எங்களுடைய தலைவரே மேற்கொள்வார். வேறு நாடுகளின் தலையீட்டிற்கு இதில் அனுமதி இல்லை என கூறியுள்ளார்.

போரை மேற்கத்திய நாடுகளே தொடங்கின. அதனால், போரை நிறுத்துவது பற்றி ஈரானே முடிவு செய்யும். இஸ்ரேல் போரை நிறுத்தினால், நாங்களும் நிறுத்துவோம். ஈரான் மக்களுக்கு எதிரான சட்டவிரோத ஆக்கிரமிப்பை இஸ்ரேல் நிறுத்தினால், நாங்கள் போரை தொடரமாட்டோம் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

கடந்த ஞாயிற்று கிழமை அராக்சி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா உள்ளது. ஆனால், ஐ.நா.வின் விதிகளை மீறி பெரும் தவறை செய்துள்ளது. சர்வதேச சட்டங்களையும் மற்றும் அணு ஆயுத பரவல் தடை சட்டம் ஆகியவற்றை மீறும் வகையில், ஈரானின் அமைதியான அணு ஆயுத நிலைகள் மீது தாக்குதல் நடந்துள்ளது. இன்று காலை நடந்த சம்பவங்கள், தீராத தொடர் விளைவுகளை கொண்டிருக்கும். ஐ.நா.வின் உறுப்பினராக உள்ள ஒவ்வொரு நாடும் இந்த ஆபத்து தரும், சட்டவிரோத மற்றும் குற்ற அணுகுமுறையால் எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

ஐ.நா. அமைப்பின் ஆவணங்கள் மற்றும் அதன் பிரிவுகளின்படி, சுய பாதுகாப்புக்கு சட்டப்பூர்வ அனுமதியளிக்கும் வகையில், ஈரான் தன்னுடைய இறையாண்மை, நலன் மற்றும் மக்களை பாதுகாக்க எல்லாவித வாய்ப்புகளையும் வைத்திருக்கிறது என்ற தகவலை வெளியிட்டார்.

இதனால், ஈரான் போரை தீவிரப்படுத்தும் முயற்சியில் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோன்று தாக்குதலை தொடுத்தது. இதனைத் தொடர்ந்து அவர் கடந்த ஞாயிறு மதியம் ரஷியாவின் மாஸ்கோ நகருக்கு புறப்பட்டு சென்றார். அவர் ரஷியாவின் அதிபர் புதின் மற்றும் பிற உயர் அதிகாரிகளை சந்தித்து தொடர்ந்து ஆலோசனை செய்து வருகிறார். அந்நாட்டின் உதவியையும் அவர் கோருவார் என பார்க்கப்படுகிறது. இந்நிலையில், போர்நிறுத்தம் பற்றிய டிரம்பின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆனால், இதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்து உள்ளது.