பஸ் படிக்கட்டில் தொங்கும் மாணவர்கள் மீது வழக்கு பதியலாம்: உயர்நீதிமன்றம்!

‛‛பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் பஸ்களின் படிக்கட்டுகளில் தொங்கி பயணித்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கையை காவல்துறை எடுக்கலாம். வழக்குப்பதிவு கூட செய்யலாம். மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எந்த தடையும் கிடையாது” என்று மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தினமும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயணித்து வருகின்றனர். இந்த வேளையில் மாணவர்களில் ஒரு பகுதியினர் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்கின்றனர். இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். ஆனாலும் கூட மாணவர்கள் தொடர்ந்து பஸ்களின் படிக்கட்டுகளில் நின்று பயணிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். குறிப்பாக பஸ்களில் கூட்டம் இருந்தாலும் சரி, கூட்டம் இல்லாமல் இருந்தாலும் கூட மாணவர்களில் ஒரு தரப்பினர் படிக்கட்டுகளில் நின்று பயணித்து வருகின்றனர். இதனை பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் கண்டித்தாலும் மாணவர்கள் கேட்பது இல்லை. மாறாக வாக்குவாதம் செய்கின்றனர். கண்டக்டர், டிரைவர்களிடம் சண்டைக்கு செல்கின்றனர்.

இதற்கிடையே தான் தூத்துக்குடியை சேர்ந்த ராம்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‛‛தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள், ஐடிஐ, பாலிடெக்னிக் உள்பட பிற கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் அரசு பஸ்களில் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது. மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இது செய்தியாகவும் வந்துள்ளது. சில வேளைகளில் விபத்துகளில் கூட மாணவர்கள் சிக்கி உயிரிழக்கின்றனர். இதனால் குறிப்பிட்ட நேரங்கள் மாணவ-மாணவிகளுக்கு என்று பிரத்யேகமாக அரசு பஸ்களை இயக்க வேண்டும். இதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கானது நீதிபதிகள் எஸ்எம் சுப்பிரமணியம் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‛‛பிள்ளைகளுக்கு பெற்றோர் அறிவுரை வழங்கி வளர்க்க வேண்டும். இதில் பெற்றோரின் கடமை இருக்கிறது. சமீபகாலமாக புகைப்பழக்கம், போதைப்பழக்கத்துக்கு மாணவர்கள் ஆளாகி வருவது அதிகரித்து வருகிறது. பள்ளிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கும் நிலை வந்துவிட்டது. படிக்கட்டுகளில் மாணவ-மாணவிகள் பயணம் செய்வது தொடர்பாக ஏராளமான குற்றச்சாட்டுகள் வருகிறது. நடத்துனர் அறிவுரை வழங்கினாலும் மாணவர்கள் ஏற்பது இல்லை. இது தண்டனைக்குரிய குற்றம். காவல்துறையினர் வழக்குப்பதிவு கூட செய்யலாம். இதனால் மாணவர்கள் பேருந்துக்குள் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனையும் மீறி படிக்கட்டுகளில் பயணம் செய்வோர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறி வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது.