அமித்ஷா தூங்கிக் கொண்டு பகல் கனவு காண்கிறார் எனவும் தமிழகத்தின் கள நிலவரம் பற்றி அவர் இன்னும் தெரிந்துகொள்ளவில்லை எனவும் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் சுற்றுலாத் தலத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை இணைந்து நடத்திய சித்தன்னவாசல் கோடை விழாவின் இரண்டாம் நிகழ்வு இன்று(வெள்ளிக்கிழமை) பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அமித்ஷா தூங்கிக் கொண்டு பகல் கனவு காண்கிறார். தமிழகத்தின் கள நிலவரம் பற்றி அவர் இன்னும் தெரிந்துகொள்ளவில்லை. மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்தை நினைத்துக் கொண்டுள்ளார். மற்ற மாநிலங்களை தமிழகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கிறார். அவரது நினைப்பு, விருப்பம் என்பது ஒரு சதவீதம்கூட தமிழகத்தில் கிடையாது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது தமிழகத்தின் வருவாய் எவ்வளவு இருந்தது? தற்போது தமிழகத்தின் வருவாய் மத்திய அரசுக்கு எவ்வளவு செல்கிறது? என்பதை தெரிவித்துவிட்டு தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படுகிறதா என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.
முருகன் மாநாட்டை வைத்து திமுக எந்த விதமான சூழ்ச்சியும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பாரதிய ஜனதா கட்சிதான் முருகன் மாநாடு நடத்தி குழப்பத்தில் உள்ளது. மத்திய அரசு பெற்று வரும் நிதி அளவுக்கு தமிழகத்துக்கு திருப்பி தருவதில்லை மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதாக சொல்வது ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
