சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு திருப்புவனம் சந்தைபேட்டை அருகே அதிமுக சார்பில் இன்று (ஜூலை 2) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த விவகாரத்தில், “யார் தனிப்படை விசாரணைக்கு உத்தரவிட்டது?” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பினார்.
அதிமுக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் எம்எல்ஏ தலைமை வகித்த இந்த ஆர்ப்பாட்டத்தில், காவலாளி அஜித்குமாரின் மரணத்துக்கு நீதி கேட்டு, தமிழக அரசு காவல் துறையைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அஜித்குமாருக்கு நீதி கேட்டு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்நாதன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு அவர், ‘’தமிழக காவல் துறையின் ஈரல் கெட்டு விட்டது. நிர்வாக திறனற்ற ஸ்டாலின் அரசால் அப்பாவி இளைஞர் கொலை செய்யப்பட்டார். கொலை செய்து விட்டு ஸாரி கேட்டால் போதுமா? திமுக அரசை முற்றாக அகற்ற சிவகங்கை மாவட்டத்தில் இருந்து தொடங்குகிறது’ என்று பேசினார்.
அடுத்து பேசிய சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர் பி. உதயகுமார், ‘’நமக்கு எப்போதும் மடப்புரம் காளியம்மன் துணையிருப்பார். அஜித்குமார் மரணத்திற்கு முதலில் கண்டனம் தெரிவித்தது எடப்பாடி பழனிசாமி. ஸ்டாலின் நான்கு நாட்கள் தவித்து வருகிறார். தமிழகத்தில் காட்டு தர்பார் ஆட்சி நடக்கின்றது. இழந்த நகைகளை தருகிறோம் அஜித்குமாரை உயிரோடு தரமுடியுமா?
அஇஅதிமுக சார்பில் பொதுநல வழக்கு தொடர்ந்து அஜித்குமார் கொலை செய்யப்பட்டதாக நிரூபிக்கப்பட்டது. காட்டுமிராண்டித்தனமாக காவல் துறை உள்ளது. கூலிப்படை கூட இப்படி ஒரு சித்ரவதை செய்யாது. அஜித்குமார் தாயிடம் வீடியோ காலில் பேசுவதற்கு முதல்வருக்கு தைரியம் இல்லை. பிணத்தின் மீது பேரம் பேசும் ஆட்சி நடந்து வருகிறது. காவல் கண்காணிப்பாளரை ஏன் சஸ்பெண்ட் செய்யவில்லை. அஜித்குமார் உறவினர்களுக்கு இந்த அரசு வாய்ப்பூட்டு சட்டம் போட்டுள்ளது. ஏன் இந்த வழக்கு மட்டும் இவ்வளவு வேகமாக விசாரிக்கப்பட்டது.
அஜித்குமார் இறப்பில் பத்து சந்தேகங்கள் உள்ளது இதற்கு பதில் சொல்ல வேண்டும். ஸ்டாலினை முதல் குற்றவாளி யாக சேர்த்தால் உண்மை தெரிந்து விடும். இது வரை 25 லாக்அப் மரணங்கள் நடந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் இருந்து திமுகவின் வீழ்ச்சி தொடங்கி விட்டது. தமிழக மக்களின் ஒற்றை நம்பிக்கை எடப்பாடி பழனிசாமி முதல்வராக அமர வேண்டும்’’ என்று பேசினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-
திமுக பிரமுகர் காரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை ஏற்றிச் செல்ல யார் அதிகாரம் கொடுத்தது? இதை கண்டித்து அன்றைய தினம் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். அஜித்குமாரின் தாய் நீதி கேட்கிறார். நீதி கேட்பது தேசக் குற்றமா? மாவட்டக் கண்காணிப்பாளர் ஏன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்? உண்மை நிலவரம் முதல்வருக்கு தெரிந்துவிட்டது. அதனால் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். தனிப்படைக்கு யார் உத்தரவிட்டது? யார் அழுத்தம் கொடுத்தது? காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால், அதுகுறித்து விசாரணை அதிகாரி விசாரிக்க வேண்டும்.
இதேபோல் காவல் நிலையங்களுக்கு வரும் அனைத்து புகார்களையும், ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் உள்ள உள்துறையின் தனிப்படை, சிறப்பு படை விசாரிக்குமா? சாத்தான்குளம் சம்பவம் நடந்தபோது, அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். முதல்வர்தான் பொறுப்பு என்று சொன்னது அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின். அவர் கூறியபடியே இச்சம்பவத்துக்கும் முதல்வர் பொறுப்பேற்க வேண்டும். அதைத்தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த விவகாரத்தில் தொடர்ந்து நீதி கேட்டு அறவழி போராட்டத்தையும், சட்டப் போராட்டத்தையும் அதிமுக நடத்தும். விளம்பரம் தேடுவது அதிமுகவின் வேலையில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தேவையான உதவிகளை அதிமுக செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரன், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜன்செல்லப்பா எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏக்கள் உமாதேவன், குணசேகரன், நாகராஜன், பாஜக மாவட்டத் தலைவர் பாண்டித்துரை, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
