பள்ளி மாணவி மரணம் குறித்து அந்தப் பள்ளியின் செயலாளர் சாந்தி விளக்கம்!

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணம் குறித்து அந்தப் பள்ளியின் செயலாளர் சாந்தி விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்திருக்கும் கனியாமூரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் அந்தப் பள்ளியின் விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாணவி சில நாட்களுக்கு முன் விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சின்னசேலம் காவல் துறையினர், மாணவியின் சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மாணவியின் மரணத்திற்கு பள்ளி நிர்வாகமே காரணம் என்று பெற்றோர் குற்றம்சாட்டினர். இதனைத்தொடர்ந்து 5 நாட்களாக மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டி நடத்தப்பட்ட போராட்டம், கலவரமாக மாறியது. பள்ளி வளாகத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்கள், வாகனங்களுக்கு தீயிட்டு எரித்தனர். இதனால் சூழல் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் தரப்பில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பின்னர் கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் மாணவி பெற்றோர் கூறி வரும் குற்றச்சாட்டுகள் குறித்து தனியார் பள்ளியின் செயலாளர் சாந்தி விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:-

மாணவி மரணமடைந்தது முதலே பள்ளி நிர்வாகம் சார்பாக தாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். இந்த விவகாரத்தில் தாங்கள் எதையும் மறைக்கவில்லை. தாங்கள் காவல்துறை விசாரணையில் இருந்ததால் மட்டுமே, மாணவியின் பெற்றோரை சந்திக்கவில்லை. ஆனால் போலீஸ் விசாரணையில் தாங்கள் இருந்த போது, இதுபோன்ற வன்முறை ஏன் நிகழ்த்தப்பட்டது. நாங்கள் எங்கேயும் ஓடவில்லை. ஆனால் தவறான தகவலை பரப்பி, ஏராளமானோரால் பள்ளியின் சொத்துகள் சூறையாடப்பட்டுள்ளது.

இந்த வன்முறைக்கு மாணவி அம்மா பொறுப்பேற்க வேண்டும். இந்த விவகாரத்தில் எங்களுக்கு நியாயம் கிடைக்க மக்கள் உண்மையை தெரிந்துகொள்ள வேண்டும். அதற்காக மாணவியின் செல்போன் மற்றும் மாணவியின் தாய் செல்போன் இரண்டு கைப்பற்றப்பட்டு, இருவருக்கும் இடையிலான உரையாடலை கண்டுபிடிக்க வேண்டும். இதன் மூலமாகவே மாணவி மரணத்திற்கான காரணம் தெரிய வரும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.