தீரன் சின்னமலை மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளையொட்டி இன்று ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த ஓடாநிலையில் தீரன் சின்னமலை மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.முக. சார்பில் இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சுதந்திரபோராட்ட மாவீரர் தீரன் சின்னமலை 266-வது பிறந்த நாள் விழா மிக சிறப்பாக எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சுதந்திர போராட்ட மாவீரர் தீரன் சின்னமலை பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் கொரோனா மற்றும் தேர்தல் விதிமுறைகள் காரணமாக இந்த நிகழ்வில் பங்கு பெற இயலவில்லை.
இந்த ஆண்டு கொரோனோ வைரஸ் தொற்று இருந்தாலும், அரசு இன்று கட்டுப்பாடுகள் எல்லாம் நீக்கியுள்ளது. அதன் காரணமாக இன்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுதந்திர போராட்ட மாவீரர் தீரன் சின்ன மலைக்கு புரட்சித்தலைவி அம்மா அமைத்த ஓடாநிலை மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அரசு சார்பில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்த உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் சக்கரபாணி, முத்துசாமி, கண்ணப்பன், வெள்ளக் கோயில் சாமிநாதன், உதய நிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., ஈசுவரன் எம்.எல்.ஏ., மேயர் ஆர்.பிரியா மற்றும் முக்கிய பிரமுகர்கள், செய்தித்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
அ.தி.மு.க. சார்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தீரன் சின்ன மலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அவருடன் தம்பிதுரை, பா.வளர்மதி ஜெயக்குமார், மாவட்ட செயலாளர்கள் சத்யா, விருகை ரவி, வெங்க டேஷ்பாபு, கே.பி.கந்தன், பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், துரைப்பாக்கம் டி.சி.கோவிந்தசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.