“திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேக விழாவில் முறையான அனுமதி பெற்று யார் வேண்டுமானாலும் அன்னதானம் செய்யலாம்” என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-
இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. அதில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு மூன்று இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்களும், கோயில் கும்பாபிஷேகத்தை அனைத்து பகுதிகளிலும் காணும் வகையில் எல்இடி திரைகள் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மருத்துவ வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 6,000 காவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 25 மருத்துவக் குழுக்களும், 27 இடங்களில் தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்படவுள்ளன. கும்பாபிஷேக விழா பணிகளுக்காக மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளை கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோயில்களில் மருந்து சாத்திய பிறகுதான் கும்பாபிஷேகம் நடைபெறும். ஆனால், திருச்செந்தூர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்த பின்னரே மருந்து சாத்தும் நிகழ்வு நடைபெறுவது மரபாக உள்ளது. எனவே, மரபு மற்றும் கடந்த கும்பாபிஷேகங்களின் பழக்க வழக்கத்தின்படி கும்பாபிஷேகத்துக்கு முன்தினம் பகல் 12 மணிக்கு நடை அடைக்கப்படுவதோடு, மறுநாள் காலையில் கும்பாபிஷேகம் நிறைவு பெற்ற பின், மருந்து சாத்தும் நிகழ்வு மாலை வரை நடைபெறும். அதற்கு பின்னரே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிப்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும்.
கும்பாபிஷேக விழாவில் முறையான அனுமதி பெற்று யார் வேண்டுமானாலும் அன்னதானம் செய்யலாம். அவர்கள் வழங்கும் அன்னதானத்தை பரிசோதிப்பதற்கு அன்னதான பரிசோதனை குழு ஒன்றை அமைத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
