என் பேச்சைக் கேட்காதவர்கள் என் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று அன்புமணியை, பாமக நிறுவனர் ராமதாஸ் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார். மேலும் இனிஷியலை வேண்டுமானால் போட்டுக் கொள்ளட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காமராஜர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தஞ்சை, திருவாரூர் மாவட்ட பாமக, வன்னியர் சங்க பொதுக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக் கூடாது. அவர் வேண்டுமானால் என் பெயரை இனிசியலாக பயன்படுத்திக் கொள்ளலாம். என் பேச்சைக் கேட்காதவர்கள் என் பெயரை பயன்படுத்தவே கூடாது. தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை, தசரன் ஆணையை ஏற்று ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் செய்தார். ராமரை 14 ஆண்டுகள் வனவாசம் போக வேண்டும் என தசரதர் சொன்னதும் ராமரின் முகம், அன்றலர்ந்த செங்தாமரை மலர் போல் இருந்தது. “நான் வனவாசமா போக சொல்கிறேன். செயல் தலைவராக இருந்து கட்சியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லுங்கள்” என்றுதானே கூறுகிறேன். ஐந்து வயது குழந்தை போல் நான் செயல்படுவதாக சிலர் கூறி வருகிறார்கள். 5 குழந்தையான நான்தான் 3 ஆண்டுகளுக்கு முன்பு அன்புமணியை பாமக தலைவராக்கியவன். இவ்வாறு அவர் கூறினார்.
