குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கான தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கான தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 28ஆம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஜூலை 15ஆம் தேதியான இன்று முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பணிகளுக்கு ஆட்கள் சேர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி செயல்பட்டு வருகிறது. ஏஓ முதல் ஆர்டிஓ வரை குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு தேர்வுகளை நடத்தி தமிழ்நாடு அரசுத் துறைகளுக்கான பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் ஆகிய குரூப் 2 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இதே போல உதவியாளர், தணிக்கை ஆய்வாளர், முழுநேர விடுதி காப்பாளர், முதுநிலை ஆய்வாளர், நேர்முக எழுத்தர், கணக்கர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் குரூப் 2ஏ மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.

கடந்த வாரம் க்ரூப் 4 தேர்வுகள் நிறைவடைந்த நிலையில், குரூப் 2, 2ஏ தேர்வுகள் எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. கடந்த ஆண்டு, குரூப் 2 பதவிகளுக்கு 507 காலிப்பணியிடங்களுக்கும், தணிக்கை ஆய்வாளர், முழுநேர விடுதி காப்பாளர், முதுநிலை ஆய்வாளர், நேர்முக எழுத்தர், கணக்கர் உள்ளிட்ட பல்வேறு குரூப் 2 ஏ பதவிகளில் சுமார் 1820 காலி பணியிடங்கள் என மொத்தமாக 2327 காலி பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது.

இதற்கிடையே இந்தாண்டு குரூப் 2, 2ஏ பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அந்த வகையில் சார்பதிவாளர், வனவர், தணிக்கை ஆய்வாளர், முதுநிலை ஆய்வாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளை நிரப்ப குரூப் 2 குரூப் 2a தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 645 காலிப் பணியிடங்களை இந்த தேர்வு மூலம் நிரப்ப டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் ஜூலை 15ஆம் தேதியான இன்று முதல் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை இந்த தேர்வுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnpsc.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.