ராபர்ட் வதேராவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை அரசியல் உள்நோக்கம் கொண்டது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ரூ.37.64 கோடி மதிப்புள்ள 43 அசையா சொத்துக்களை முடக்கியுள்ள அமலாக்கத்துறை, அவருக்கு எதிராக டெல்லி ரோஸ் அவென்யூ வளாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, “என்னுடைய மைத்துனரை கடந்த 10 வருடங்களாக இந்த அரசு வேட்டையாடி வருகிறது. இந்த புதிய குற்றப்பத்திரிகை அந்த வேட்டையின் தொடர்ச்சியாகும். ராபர்ட், பிரியங்கா மற்றும் அவரது குழந்தைகள் அரசியல் உள்நோக்கம் கொண்ட துன்புறுத்தலை எதிர்கொள்ளும் நிலையில் நான் அவர்களுக்கு ஆதரவாக நிற்கிறேன். அவர்கள் அனைவரும் எப்படிப்பட்ட துன்புறுத்தலையும் எதிர்கொள்ளும் அளவுக்கு தைரியமானவர்கள் என்பதை நான் அறிவேன். அந்த தைரியத்துடனும் கண்ணியத்துடனும் அவர்கள் தொடர்ந்து இருப்பார்கள். இறுதியில் உண்மை வெல்லும்” என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா (56), ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் கடந்த 2008 பிப்ரவரியில் ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் ரூ.7.50 கோடியில் 3.5 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கியது. இங்கு அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு, அப்போதைய காங்கிரஸ் முதல்வர் பூபேந்திர சிங் ஹுடா அனுமதி வழங்கினார். இதன் காரணமாக, நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது.
அதன்பிறகு, ராபர்ட் வதேராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம், அந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டாமல், டிஎல்எஃப் நிறுவனத்துக்கு ரூ.58 கோடிக்கு அந்த நிலத்தை விற்பனை செய்தது. கட்டுமான உரிமத்தையும் அந்த நிறுவனத்துக்கு வழங்கியது. இந்த நில விற்பனையில் பண மோசடி, முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ராபர்ட் வதேராவிடம் பலமுறை விசாரணை நடத்தப்பட்டது.
டெல்லி ரோஸ் அவென்யூ வளாக நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில், ராபர்ட் வதேரா மீது அமலாக்கத் துறை சார்பில் சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ரூ.37.64 கோடி மதிப்பிலான 43 சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.
