முதல்வர் மருத்துவமனையில் எப்போது வீடு திரும்புவார் என்று மருத்துவமனை இன்று கூறுவார்கள்: மா.சுப்பிரமணியன்!

முதல்வர் ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து எப்போது வீடு திரும்புவார் என்று மருத்துவமனை இன்று கூறுவார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார். கடந்த சில மாதங்களாகவே மாவட்ட வாரியாக பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், ரோடு ஷோ மூலமாக மக்களைச் சந்தித்து வந்தார். 72 வயதிலும் நீண்ட தூரம் ஸ்டாலின் நடந்து சென்று மக்களை சந்தித்தது பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்ட போது, லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதன் காரணமாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன்பின் அப்பல்லோ மருத்துவமனை சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், முதல்வர் ஸ்டாலின் மேலும் 3 நாட்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவருக்கு வேறு சில பரிசோதனைகள் மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்தபடி அரசுப் பணிகளை முதல்வர் மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது. நேற்று மருத்துவப் பரிசோதனைக்காக தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின் அழைத்துச் செல்லப்பட்டார். பரிசோதனைக்குப் பின் மீண்டும் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து மருத்துவமனையில் இருந்தவாறே, தலைமைச் செயலாளருடன் இணைந்து உங்களுடன் ஸ்டாலின் திட்டங்களை ஆய்வு மேற்கொண்ட ஸ்டாலின், அதிகாரிகளுக்கு சில அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.

இந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்தார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து மா.சுப்பிரமணியன் பேசுகையில், முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை நன்றாக உள்ளது. அவரின் உடல்நலம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பாக அறிக்கை வெளியிடப்படும். மு.க.முத்து மறைவின் போது நாள் முழுவதும் முதல்வர் ஸ்டாலின் நின்றுகொண்டே இருந்தார். தொடர்ச்சியாக ஒன்றரை கிமீ நடைப்பயணம் மேற்கொண்டதால், சோர்வடைந்தார். இதனால் முதல்வர் ஸ்டாலின் சிகிச்சை முடிந்து எப்போது வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் இன்று கூறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.