அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் ரவிச்சந்திரன் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பொருட்களையும் திருப்பி ஒப்படைக்க ஆணையிட்டுள்ளது.
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோர் டிவிஎச் (ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்) என்ற பெயரில் கட்டுமான நிறுவனம், டி.வி.ஹெச் எனர்ஜி ரிசோர்ஸ் பிரைவேட் லிமிடெட், எனர்ட்டியா சோலார் இன்ஃப்ரா, எனர்ட்டியா வின்ட் இன்ஃப்ரா, ட்ரூ வேல்யூ ரியல் எஸ்டேட் என பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக ரவிச்சந்திரன், மயிலாப்பூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 2013 ஆம் ஆண்டு ரூ.30 கோடி கடன் கேட்டு விண்ணப்பித்தனர். விண்ணப்பத்தை பரிசீலனை செய்த வங்கி ரூ.22.48 கோடி கடன் வழங்கியது. கடந்த 2013 ஆம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடமிருந்து பெற்ற 30 கோடி ரூபாய் கடனை சகோதர நிறுவனங்களுக்கு திருப்பிவிட்டதால், 22 கோடியே 48 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அமைச்சர் கேஎன் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் இயக்குநராக உள்ள நிறுவனத்துக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் என். ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மீது 2021 ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கின் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது. இந்நிலையில், அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பொருட்களையும் திருப்பி ஒப்படைக்க ஆணையிட்டுள்ளது.
முன்னதாக, ரவிச்சந்திரன் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கை சென்னை ஐகோர்ட் ரத்து செய்திருந்தது. அடுத்தடுத்து வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால் கேஎன் நேரு குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
