மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட வன்முறை காரணமாக கடந்த பிப்ரவரியில் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் இன்னும் இயல்பு நிலை திரும்பாததால், அடுத்த 6 மாத காலத்திற்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிப்பு ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.
முன்னாள் முதலமைச்சர் என். பிரேன் சிங் ராஜினாமா செய்ததை அடுத்து, பிப்ரவரி 13 அன்று மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. மெய்தி சமூகத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏக்களின் அரசியல் அழுத்தம் காரணமாக அவர் பதவி விலகியிருந்தார். ஆளும் என்டிஏ கூட்டணியில் உள்ள மெய்தி மற்றும் நாகா எம்எல்ஏக்கள் மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மீண்டும் நிறுவ முயற்சி செய்து வருகின்றனர். இந்த முயற்சிகளுக்கு மத்தியில் குடியரசுத் தலைவர் ஆட்சி நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 356(3) பிரிவின் கீழ், குடியரசுத் தலைவர் ஆட்சி ஆளுநரின் அலுவலகம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இது பொதுவாக ஆறு மாதங்கள் நீடிக்கும். நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் புதுப்பிக்கப்பட்டு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம்.
