தற்போது பாதுகாப்புதுறை ஏற்றுமதியாளராக முன்னேறி வருகிறோம்: பிரதமர் மோடி!

எதிரிகளால் யூகிக்க முடியாத ஆயுதங்கள் வரும் காலங்களில் இந்திய ராணுவ வீரர்களிடம் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தொடர்புடைய நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

இந்தியாவில் பாதுகாப்பான சுற்றுச்சூழல் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அண்மைக் காலமாக இறக்குமதியின் அளவு குறைந்து, ஏற்றுமதியின் அளவு அதிகரித்துள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பின் சிறிய சிறிய பொருட்களுக்கு கூட வெளிநாடுகளை சார்ந்து இருக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுவிட்டோம். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இரண்டாம் உலகப் போரின்போது நாம் பாதுகாப்பு துறையில் இறக்குமதியாளராக இருந்தோம். வெளிநாட்டை எதிர்பார்த்தோம் போதைப் பொருட்களுக்கு அடிமையான மனிதனை போல், நாம் சாதாரன பாதுகாப்பு பொருட்களுக்கு கூட வெளிநாட்டை அன்னாந்து பார்த்தோம். . வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அடிமையாகவே இருந்தோம் கிடந்தோம்.

ஆனால் 2014 ஆண்டுக்கு பின் பாஜக அரசு குறிக்கோளுடன் செயல்பட்டது. கடந்த கால அனுபவங்களில் இருந்து, எங்கள் அணுகுறையை மாற்றிக் கொண்டோம். இந்தியாவின் இலக்கு 21ம் நூற்றாண்டில் இந்தியா, பாதுகாப்புத்துறையில் முன்னேற வேண்டி இருந்தது முக்கியத் தேவையாக இருந்தது. அதற்கான முதல் படி தான், அடுத்த ஆண்டு சுதந்திர தினத்திற்குள் கடற்படைக்காக 75 உள்நாட்டு தொழில்நுட்பங்களை உருவாக்குவது. இதன் மூலம் 100ம் ஆண்டு சுதந்திர தினத்தின் போது, இந்திய பாதுகாப்புத்துறை வேறு ஒரு உயரத்திற்கு கொண்டு செல்வதே இலக்காக இருக்க வேண்டும்.

இந்திய இளைஞர்களிடம் திறமை கொட்டிக்கிடக்கிறது. ஆனால் உலகமே வைத்துள்ள அதே 10 ஆயுதங்களுடன் நமது ராணுவ வீரர்களை அனுப்புவது அறிவார்ந்த செயல் அல்ல. எதிராளிகளால் யூகிக்க முடியாத ஒன்று நமது வீரர்களிடம் இருக்க வேண்டும்.

பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் பெரும்பகுதி இந்திய நிறுவனங்களிடம் இருந்து வாங்குவதற்கு செலவிடப்படுகிறது. கடந்த 4-5 ஆண்டுகளில் குறுகிய காலத்தில், நமது பாதுகாப்பு இறக்குமதி சுமார் 21 சதவீதம் குறைந்துள்ளது. இதன் மூலம் நாம் முன்னர் பாதுகாப்பு இறக்குமதியாளராக இருந்து தற்போது பாதுகாப்புதுறை ஏற்றுமதியாளராக முன்னேறி வருகிறோம். நாம் நமது தயாரிப்புகளுக்கு மதிப்பளிக்கவில்லை என்றால், உலகம் நம்மிடம் முதலீடு செய்யும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும். நமது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் மீது நாம் நம்பிக்கை ஊட்டியபோது, உலகமே முன் வந்தது. இவ்வாறு மோடி பேசினார்.