இஸ்ரேல் காசா மீது நடத்தி வரும் போர் காரணமாக காசா கடுமையான உணவு பஞ்சத்தில் சிக்கியிருக்கிறது. பட்டினி காரணமாக உயிரிழப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. காசாவில் மூன்றில் ஒருவர் உணவு இல்லாமல் பட்டினியால் வாடுவதாக ஐநா எச்சரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு உதவி திட்டம் இதனை கூறியிருக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதால், 90,000 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உடனடி சிகிச்சை தேவைப்படுகிறது என்றும் ஐநா தெரிவித்துள்ளது.
காசாவுக்குள் அனைத்து பொருட்களும் இஸ்ரேல் வழியாகவே செல்கின்றன. ஆனால் இஸ்ரேல் அனுமதி மறுப்பதால் உலக நாடுகள் அனுப்பிய உதவிகள் உள்ளே சென்று சேராமல் இருக்கிறது. உதவிப் பொருட்களை காசாவுக்குள் கொண்டு செல்வதற்கு வேறு வழியில்லை. இந்நிலையில், காசாவுக்குள் உணவுப் பொருட்களை விமானம் மூலம் வீச இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது. ஆனால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் உணவுப் பொருட்களை வீச இன்னும் இஸ்ரேல் அனுமதி அளிக்கவில்லை என்று கூறுகிறது.
இஸ்ரேல் அரசின் இந்த நடவடிக்கையை ஐ.நா. விமர்சித்துள்ளது. மேலும், காசாவுக்குள் உதவிப் பொருட்கள் செல்வதற்கான தடைகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளன. காசாவில் மனிதாபிமான பேரழிவு நடந்து கொண்டிருக்கிறது என்றும், இஸ்ரேல் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் தனது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அந்த நாடுகள் கூட்டறிக்கை மூலம் தெரிவித்துள்ளன.
சர்வதேச சமூகம் காட்டும் அக்கறையின்மை, இரக்கமின்மை, உண்மை இல்லாமை மற்றும் மனிதாபிமானமின்மையை என்னால் விளக்க முடியவில்லை என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் வேதனை தெரிவித்துள்ளார். மே 27 முதல் உணவுக்காக காத்திருந்த 1,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதற்கிடையில், புதிய போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் மீட்பு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பேச்சுவார்த்தைக் குழுக்கள் கத்தாரிலிருந்து திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்த டொனால்ட் டிரம்ப், ஹமாஸ் உண்மையில் ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்பவில்லை என்றும், அவர்கள் சாக விரும்புகிறார்கள் என்றும் கூறினார்.
கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதியன்று தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது போர் தொடுத்தது. ஹமாஸ் நடத்தி வரும் சுகாதார அமைச்சகத்தின் தகவல்களின்படி, காசாவில் இதுவரை 59,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
மார்ச் மாத தொடக்கத்தில் இஸ்ரேல் உதவிப் பொருட்கள் அனைத்தையும் தடுத்து நிறுத்தியது. இரண்டு மாத போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இரண்டு வாரங்கள் கழித்து ஹமாஸுக்கு எதிரான இராணுவத் தாக்குதலை மீண்டும் தொடங்கியது. பிணைக் கைதிகளாக உள்ள இஸ்ரேலியர்களை விடுவிக்க ஹமாஸுக்கு அழுத்தம் கொடுக்கவே இவ்வாறு செய்வதாக இஸ்ரேல் கூறியது. உலகளாவிய நிபுணர்கள் உணவுப் பஞ்சம் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரித்த பின்னரும், உணவு, மருந்து மற்றும் எரிபொருள் பற்றாக்குறை மோசமடைந்துள்ளது.
காசாவின் பெரும்பான்மையான மக்கள் பலமுறை இடம்பெயர்ந்துள்ளனர். 90% வீடுகள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன. பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க இருப்பதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. இதற்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், இஸ்ரேலுடன் இணைந்து பாலஸ்தீனமும் ஒரு நாடாக இருக்க வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
