மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், கடந்த 32 ஆண்டு கால பொது வாழ்க்கையை துரோகி எனக் கூறி சிறுமைப்படுத்தியதாக குற்றம்சாட்டி, நீதி கேட்டு மல்லை சத்யா வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி உண்ணாவிரதம் நடத்தப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோவுக்கும், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் துணைப் பொதுச் செயலாளருமான மல்லை சத்யாவுக்கும் இடையே சமீப காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் நடந்த மதிமுக பொதுக்குழுவில், மல்லை சத்யா துரை வைகோவை விமர்சித்து பேசினார். இதனையடுத்து துரை வைகோ கோபமடைந்து வெளியேறினார். இதன் காரணமாக துரை வைகோ- மல்லை சத்யா இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. அதன்பிறகு வைகோ தலையிட்டு சமாதானம் செய்து வைத்தார்.
இந்நிலையில் தான் வைகோ, மல்லை சத்யாவை விமர்சித்து கட்சி கூட்டத்தில் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. துரோகி பட்டம் கொடுத்து வைகோ தன்னை வெளியேற்ற முயற்சிப்பதாக அக்கட்சியின் மல்லை சத்யா குற்றம் சாட்டியிருந்தார். குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, துரை வைகோவிற்காக எனக்கு துரோகி பட்டம் காட்டுகிறார் என்றும் வைகோவின் உயிரை 3 முறை காப்பாற்றிய என்னை துரோகி என சொல்லும் அளவுக்கு அவர் துணிந்துள்ளார் என்றும் குற்றம் சாட்டியிருந்தார் மல்லை சத்யா. இந்த நிகழ்வு, மதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று மதிமுவின் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அவரது படங்களை கட்சி நிகழ்ச்சிகளில் பயன்படுத்த வேண்டாம் என உத்தரவிடப்பட்டது.
இந்த சூழலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு எதிராக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உண்ணாவிரத போரட்டம் நடத்தவுள்ளார். உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி கேட்டு சென்னை காவல் ஆணையருக்கு மனு கொடுத்துள்ளார். அவரது மனுவை ஏற்றுக்கொண்ட காவல்துறையும், காலை 10 மணி முதல் 5 மணி வரையில் சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
32 ஆண்டுகால பொது வாழ்க்கையை கேள்விக் குறியாக்கும் வகையில் துரோகி என சொல்லி சிறுமைப்படுத்தியதாக குற்றம்சாட்டிய மல்லை சத்யா, நாட்டு மக்களிடம் நீதி கேட்டு அடையாள உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
