குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் முன்னாள் ஆளுநர் மார்கரெட் ஆல்வா, இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
நாட்டின் 13வது குடியரசுத் துணைத் தலைவராக, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கையா நாயுடு பதவி வகிக்கிறார். இவரது பதவிக்காலம், வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநர் ஜக்தீப் தன்கர் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில், முன்னாள் ஆளுநர் மார்கரெட் ஆல்வா களமிறங்குகிறார்.
இந்நிலையில் இன்று, குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் முன்னாள் ஆளுநர் மார்கரெட் ஆல்வா, நாடாளுமன்ற செயலகத்தில், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்த நிகழ்வில், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, அதிர் ரஞ்சன் சவுத்ரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத், திமுக எம்பி திருச்சி சிவா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.