காவல் உதவி ஆய்வாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது: வேல்முருகன்!

திருப்பூரில் காவல் உதவி ஆய்வாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதோடு அவர்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளதாவது:-

திருப்பூர் மாவட்டம் குடியமங்கலம் காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சண்முகவேல். இவரும், ஆயுதப்படை காவலர் அழகுராஜாவும், 05.08.2025 அன்று ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் வேலை செய்யும் மூர்த்தியும், அவரது மகன் தங்கபாண்டியனும் முன் விரோத காரணமாக தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து சென்ற காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேலும், ஆயுதப்படை காவலர் அழகுராஜாவும், மூர்த்தி மற்றும் அவரது மகன்கள் தங்கபாண்டி, மற்றொரு மகன் மணிகண்டனிடம் விசாரணை நடத்தியுள்ளார்.

அப்போது, ஆத்திரமடைந்த தங்கபாண்டி, அவரது சகோதரர் மணிகண்டனும், காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேலை சரமாரியாக வெட்டி படுகொலை செய்திருக்கின்றனர். குறிப்பாக, தங்கபாண்டியனும், அவரது சகோதரர் மணிகண்டனும் மதுபோதையில் இருக்கும் போது, இந்த படுகொலையை செய்திருக்கின்றனர்.

காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேலின் உயிரிழப்பு, காவல்துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும். மேலும், தமிழ்நாட்டில் சமீப காலமாக அதிகரித்து வரும் போதைப்பொருட்கள் கலாச்சாரத்தால், பொதுமக்கள் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில், அது காவல்துறையினருக்கும் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் நடமாட்டம் தலை விரித்தாடுவது, மனித சமூகத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. எனவே, தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட, தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட வேண்டும். குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள மதுபானக் கடைகளை இழுத்து மூடி, பூரண மதுவிலக்கை அமல்படுத்த தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும்.

படுகொலை செய்யப்பட்ட சண்முகவேலின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு இழப்பீடாக ஒரு 1 கோடி வழங்கியிருப்பது ஆறுதல் அளிக்கிறது. அதே நேரத்தில், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும். காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆயுதப்படை காவலர் அழகுராஜாவுக்கு உயர்தர சிகிச்சையும், ரூ.20 லட்சம் இழப்பீடும் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, தப்பியோடிய குற்றவாளிகள் தங்கபாண்டியனும், அவரது சகோதரர் மணிகண்டனையும் விரைந்து கைது செய்து, அவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சண்முகவேலை இழந்து வாடும் காவல்துறையினருக்கும், குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

எதிர் காலங்களில் காவல்துறையினருக்கு இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்காத வகையில், உரிய பாதுகாப்பு வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.