தேவை எனும்போது என்கவுன்ட்டரை தவிர்க்க முடியாது: அமைச்சர் ரகுபதி!

“என்கவுன்ட்டர் தேவை என்றால், அதை தவிர்க்க முடியாது” என தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார்.

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியதாவது:-

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி சர்டிபிகேட் கொடுக்க தேவையில்லை. அதை நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை. தமிழகத்தில் நலமாக, வளமாக, பாதுகாப்பாக இருக்கிறோம் என்று மக்கள் சர்டிபிகேட் கொடுக்கிறார்கள். அது போதும்.

கொலை, கொள்ளை குறித்து எந்த இடத்தில் தவறு நடந்தாலும் அதை உடனே கண்டுபிடித்து தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருகிறது. என்கவுன்ட்டர் தேவை என்றால், அதை தவிர்க்க முடியாது. போலீஸார் விசாரணக்கு தனியாக செல்லும்போது சில நேரங்களில் பிரச்சினை நடந்துவிடுகிறது. ஆனால், வடமாநிலங்களில் இதைவிட மோசமாக நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக திருப்பூர் மாவட்டம் உடுமலை குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐ ஆக பணியாற்றி வந்தவர் சண்முகவேல். விசாரணைக்காக சென்ற இடத்தில் தந்தை மகன்கள் சேர்ந்து அவரை கொடூரமாக கொலை செய்தனர். இந்த வழக்கில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த மூர்த்தி (66), அவரது மகன்கள் மணிகண்டன் (30), தங்கப்பாண்டி (28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதில் இன்று காலை கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் மறைத்து வைத்திருந்த இடத்தை காட்டுவதற்காக சென்ற மணிகண்டன் போலீஸாரை அரிவாளால் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த குடிமங்கலம் உதவி ஆய்வாளர் சரவணகுமார் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீஸாரை தாக்க முயன்ற மணிகண்டன் என்கவுன்ட்டரில் சுட்டு கொல்லப்பட்டார். இதையடுத்து மணிகண்டன் உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து மூர்த்தி மற்றும் தங்கப்பாண்டி ஆகியோர் விசாரணைக்குப் பின் இன்று உடுமலை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2 ல் ஆஜர்படுத்தப்பட்டனர்.