குற்றம் நிரூபிக்கப்படாவிட்டாலும் நீங்களே வெற்றியாளர்: அமலாக்கத்துறையை சாடிய உச்சநீதிமன்றம்!

“அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுபவர்களில் 0.1 சதவிகிதம் பேர் மட்டுமே தண்டனை பெறுகின்றனர். குற்றம் நிரூபிக்கப்படாவிட்டாலும் நீங்களே வெற்றியாளர்” என உச்ச நீதிமன்றம் காட்டமாகத் தெரிவித்துள்ளது.

இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, அமலாக்கத் துறையால் நடத்தப்படும் விசாரணை குறித்து வழக்கறிஞர் கூறியதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கோட்டீஸ்வர் சிங், சூர்ய காந்த், உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு அமலாக்கத் துறையை கடுமையாக விமர்சித்துள்ளது. விசாரணையே நடத்தாமல் அமலாக்கத் துறை பலர் மீது வழக்குகளைத் தொடர்ந்து, கைது நடவடிக்கைகளையும் எடுத்து விசாரணையே நடத்தாமல் பல ஆண்டுகளாக பலரையும் சிறையில் வைத்திருப்பதாக உச்ச நீதிமன்றம் குற்றம்சாட்டி உள்ளது. இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பண மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்ட 5,892 பேரில், வெறும் 0.1 சதவீதம் பேருக்கு எதிராகவே குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் மோசமான விஷயம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவர்கள் குற்றவாளிகள் இல்லையென்றாலும் பல வருடங்களாக விசாரணை இல்லாமல் அவர்களுக்கு தண்டனை வழங்குவதில் நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குற்றவாளிகள் என ஒருவர் நிரூபிக்கப்படவில்லை என்றாலும் ஆண்டுக் கணக்கில் அவரை சிறையில் வைக்கிறீர்கள். வழக்கு விசாரணையே நடத்தாமல் பலரையும் சிறையில் அடைக்கிறீர்கள். ஒருவரை கைது செய்து, அவரை சிறையில் அடைத்து வழக்கை உருவாக்க கால அவகாசம் கேட்கிறீர்கள். எதிர்க்கட்சியினருக்கு எதிராக இந்த பழக்கம் உருவாகி இருக்கிறது என்றும் விமர்சித்துள்ளது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு.

அமலாக்கத்துறை நேர்மையின்றி செயல்படக்கூடாது. சட்டத்துக்கு உட்பட்டு அமலாக்கத்துறை செயல்பட வேண்டும். அமலாக்கத்துறை தனது விசாரணையை மேம்படுத்த வேண்டும். குற்றவாளி என ஒருவர் நிரூபிக்கப்படவில்லை என்றாலும், வழக்கு விசாரணையே நடத்தாமல் ஆண்டுக்கணக்கில் அந்த நபரை சிறையில் வைக்கிறீர்கள். மக்களின் சுதந்திரம் மிகவும் முக்கியமானது. 5, 6 ஆண்டு சிறையில் இருந்த பின், விடுதலை செய்தால் அவருக்கு ஏற்பட்ட இழப்பை யார் சரிகட்டுவது? எனக் கேள்வி எழுப்பினர்.

அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல், யூடியூபில், அமலாக்கத் துறை மற்றும் அதன் விசாரணைக்கு எதிராக பதிவு செய்யப்படும் கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, தெரிந்த சில உண்மைகளை தான் இங்கே கூறுவதாகவும், பண மோசடி வழக்கில் ரூ.23,000 கோடி கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், சில அரசியல்வாதிகளின் வீடுகளில் சோதனை நடத்தும்போது, பணம் எண்ணும் இயந்திரங்கள் நின்றுவிடுகின்றன. புதிய இயந்திரங்களைக் கொண்டு வரும் நிலை ஏற்படுகிறது என்றும் தெரிவித்தார். இவ்வாறாக அமலாக்கத்துறை வழக்கறிஞர் – நீதிபதிகள் இடையே காரசார விவாதம் நடந்தது.