பொன்முடி மீதான புகார்களை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி ஐகோர்ட்டில் மனு!

சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்களின் விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழு அல்லது சிபிஐக்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக புகார்கள் அளிக்கப்பட்டன. இதனால் பொன்முடியின் திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. பின்னர் அமைச்சரவையில் இருந்தும் நீக்கப்பட்டார் பொன்முடி. பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி பி.ஜெகந்நாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி கேஆர் ஶ்ரீராம், நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த விசாரணையின் போது தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பொன்முடியின் வெறுப்பு பேச்சுக்காக அவர் மீது வழக்கு பதிவு செய்து ஏப்ரல் 23 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்; பொன்முடி மீது உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார். பொன்முடி மீதான புகார்களை விசாரித்த சைபர் கிரைம் போலீசார் அந்த புகார்களில் முகாந்திரம் இல்லை எனக் கூறி அவற்றை முடித்து வைத்தனர். பொன்முடிக்கு எதிராக பெறப்பட்ட 115 புகார்கள் முடித்து வைக்கப்பட்டு புகார்தாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக தமிழக அட்வகேட் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில், பொன்முடிக்கு எதிராக புகார் அளித்தவர்களில் ஒருவரான பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்கள் குறித்து முறையாக விசாரணை நடத்தப்படாமலேயே முடித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பொன்முடி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் என்பதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய போலீசார் தயங்குவதாகவும் தனது மனுவில் குற்றம்சாட்டியுள்ளார். எனவே, பொன்முடி மீதான புகார்களை முடித்து வைத்த உத்தரவை ரத்து செய்து அவர் மீது அளிக்கப்பட்ட புகார்களின் விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழு அல்லது சிபிஐக்கு மாற்ற வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.