இளம் தலைமுறையின் கனவுகள் நனவாக திமுக அரசு எப்போதும் துணை நிற்கும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தின் விடியலுக்காக இளைஞர்களால் உருவான இயக்கம் திமுக. இந்திய வரலாற்றிலேயே இளைஞர் அணியை உருவாக்கிய முதல் அரசியல் இயக்கமும் திமுகதான். இளைஞர்களால் உருவாகி, இளைஞர்களோடு பயணித்து, எதிர்கால இளம் சமுதாயம் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார சமநிலை பெற தொடர்ந்து போராடும் இயக்கத்தின் இளைஞர் அணிச் செயலாளர் என்ற முறையில் தமிழகத்தின் நாளைய தலைவர்கள் அனைவருக்கும் சர்வதேச இளைஞர்கள் தின வாழ்த்துக்கள்.
இளம் தலைமுறையின் கனவுகள் நனவாக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு என்றும் துணை நிற்கும். எதிர்காலம் நமக்கானது. உயர்ந்த கனவுகளோடு அயராது உழைப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இத்துடன் கடந்து 4 ஆண்டு கால திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்த வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:-
திறமைமிக்க தமிழக இளைஞர்களை இன்றைக்கு உலகமே உற்று கவனிக்கிறது. தமிழகத்தின் இளைய சமுதாயம் உலகை வெல்ல தயார் நிலையில் உள்ளதற்கு காரணம் கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் கல்வியோடு சேர்த்து இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு என்ன தேவையோ, அதை சரியாக செய்து கொடுத்துள்ளது திமுக. மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவல்படி இந்தியா முழுவதும் உள்ள 1.40 லட்சம் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் 8 சதவீத நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளன.
அதேபோல் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 272 வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, அதன்மூலம் 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலை கிடைத்துள்ளது. 41 லட்சம் மாணவர்களுக்கும் 1 லட்சம் விரிவுரையாளர்களுக்கும் நான் முதல்வன் திட்டம் மூலமாக திறன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தொழில் வளர்ச்சிக்கு தமிழகம் ஒரு முன்னோடி சாம்பியன் மாநிலமாக திகழ்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
