2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறும்: வைகோ!

திட்டமிட்டு ம.தி.மு.க. கூட்டணி மாற போகிறது என எங்கள் மீது களங்கம் ஏற்படுத்த பார்க்கிறார்கள் என வைகோ கூறியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு அரசியல் நோக்கோடு தங்களை எதிர்ப்பவர்களை அச்சுறுத்த வருமான வரி, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை பயன்படுத்தி வருகிறது. அந்தவகையில் தான் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் மேகங்கள் கூடி கலைவதை போல கட்சிகள் உருவாகி கொண்டு தினமும் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. கூட்டணி அமைப்பது அவரவர் விருப்பம். ம.தி.மு.க.வை பொறுத்தவரை 8 ஆண்டுகளுக்கு முன்னால் நாங்கள் எடுத்த தீர்க்கமான முடிவான தி.மு.க.வை ஆதரிப்பது என்கிற அடிப்படையில் தொடர்ந்து ஆதரித்து வருகிறோம்.

2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி தான் மிகப்பெரிய வெற்றி பெறும். தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். தி.மு.க. கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது. அது நடக்கவே நடக்காது. ஆனால் வேண்டும் என்றே சிலர் திட்டமிட்டு ம.தி.மு.க. கூட்டணி மாற போகிறது என எங்கள் மீது களங்கம் ஏற்படுத்த பார்க்கிறார்கள். நாங்கள் பா.ஜனதாவுக்கு தூது விடுகிறோம். மந்திரி பதவிக்கு ஏங்குகிறோம் என்கிறார்கள். அது அப்பட்டமான முழு பொய். இவ்வாறு அவர் கூறினார்.