அமைச்சர் ஐ பெரியசாமி மற்றும் அவரது மகனும், திமுக எம்எல்ஏவுமான செந்தில் குமார் வீட்டில் அமலாக்கத்துறை நேற்று முன்தினம் அதிரடியாக சோதனை நடத்தினர். திண்டுக்கல் மற்றும் சென்னையில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதன் பின்னணி மற்றும் பறிமுதல் செய்தது தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அமலாக்கத்துறை இன்று தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
தமிழக பஞ்சாயத்து ராஜ் மற்றுமு் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி மற்றும் அவரது மகனும், பழனி தொகுதி எம்எல்ஏவுமான ஐபி செந்தில் குமார் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் 16/08/2025 அன்று அமலாக்கத்துறை சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை திண்டுக்கல் மற்றும் சென்னையில் பல இடங்களில் நடந்தது.
சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான விஷயத்தில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் முடிவில் சொத்து ஆவணங்கள், முதலீடு சார்ந்த ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
