தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான அமைச்சர் துரைமுருகன் திடீரென மயங்கி விழுந்து கையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் காரணமாகவே அவர் சுதந்திர தின நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்து இருக்கிறார்.
திமுக முன்னோடிகளில் மிக மூத்த வரும் முக்கிய நிர்வாகிகளில் ஒருவருமான துரைமுருகன் தற்போது தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சராக இருக்கிறார். மேலும் திமுகவின் முக்கிய பதவியான பொதுச் செயலாளர் பதவியையும் வகித்து வருகிறார். இந்த நிலையில் திடீரென அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் துரைமுருகன் பங்கேற்காத நிலையில் எதனால் அவர் கலந்து கொள்ளவில்லை என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் தான் அதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை சேப்பாக்கத்தில் இருந்து மயிலாப்பூர் வரை தெற்கு பகிங்காம் கால்வாய் புனரமைப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும் பங்கேற்றார். தொடர்ந்து சென்னை ஜெகத் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிலும் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. அப்போது திடீரென அவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்ததில் தோள்பட்டையில் எலும்பில் சிராய்ப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதை அடுத்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தோர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு மூன்று நாட்களாக இருக்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதனால் தான் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்கவில்லை என சொல்கின்றனர் திமுகவினர்.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பிய அமைச்சர் துரைமுருகனை தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்து இருக்கிறார். மேலும் மருத்துவர்கள் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. தற்போது அமைச்சர் துரைமுருகன் உடல்நலம் தேறி இருக்கும் நிலையில் விரைவில் தனது வழக்கமான பணிகளை தொடங்குவார் என்கின்றனர் திமுகவினர்.
