மத்திய அரசு மீது வீண்பழி போடும் திமுக அரசு: தங்கமணி

மின்கட்டண உயர்வு விவகாரத்தில் மத்திய அரசு மீது மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீண்பழி சுமத்துகிறார் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தங்கமணி விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார். மத்திய அரசின் அழுத்தம் காரணமாக மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
இதன்மூலம் 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எதிர்க்கட்சிகள் பலவும் மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என கூறி வருகின்றன.

இந்நிலையில் தான் தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்வு தொடர்பாக அதிமுகவின் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி திமுகவை விமர்சனம் செய்துள்ளார். நாமக்கல்லில் தங்கமணி இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் மின்கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தாமல், அனைவருக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கினோம். தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழ்ந்தது. ஆனால் தற்போதைய நிலை வேறாக உள்ளது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றாத நிலையில் ஆட்சிக்கு வந்து ஓராண்டில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்துகின்றனர். மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றால், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் பெற்று, பொதுமக்களின் கருத்தைக் கேட்க வேண்டும். ஆனால் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மின்சார கட்டணம் உயர்வுக்கான பட்டியலை அவரே தயார் செய்துகொண்டு ஒழுங்குமுறை வாரியத்திற்கு அனுப்பி வைக்கிறார். அதோடு மின்கட்டண உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம் என வீண் புகார் கூறுகிறார்.

மின்வாரியத்தின் கடனை அடைக்க ரூ.13,000 கோடி, மின்வாரியத்திற்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் தெரிவித்தது. ஆனால் ரூ.3,000 கோடிதான் கொடுக்கப்பட்டது. ரூ.13,000 கோடி வழங்கி இருந்தால் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. மின்சாரத் துறை என்பது சேவைத்துறை, மக்களுக்கு சேவைசெய்ய வேண்டியத் துறையில், கட்டணத்தை உயர்த்தி லாபம் பார்க்கக் கூடாது. இதுபோன்ற அடிப்படை கருத்துக்களை கூட புரிந்துகொள்ளாத மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சியில் கடன் ஏற்படுத்தி விட்டார்கள் அதனால்தான் மின் கட்டணத்தை உயர்த்துகிறோம் என்று கூறுகிறார். அவ்வளவு கடன் இருந்தாலும், கடந்த 5 ஆண்டுகளில் மக்களின் நிலையை உணர்ந்த அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மின் கட்டணத்தை உயர்த்தாமல், தடையில்லா மின்சாரம் வழங்கினார். உங்களால் ஏன் முடியவில்லை.

கொரோனா காலத்தால் வேலையிழப்பு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மின்கட்டண உயர்வு வேதனை அளிப்பதாக உள்ளது. மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் விசைத்தறி தொழில்கள் முழுமையாக நலிவடையும். தமிழக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் கடும் நெருக்கடியான நேரத்தில், பொதுமக்களைப் பற்றி சிந்திக்காமல் முதலில் சொத்து வரியை உயர்த்தினார்கள். தற்போது மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர், விரைவில் பேருந்து கட்டணத்தையும் உயர்த்துவார்கள். இதனால் திமுகவுக்கு வாக்களித்த பொதுமக்கள் வெறுப்படைந்துள்ளனர். அதிமுக சார்பில் மின்சாரக்கட்டண உயர்வைக் கண்டித்து வருகிற 25ம் தேதி நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். வரும் 2024 மக்களவை தேர்தலில் பொதுமக்கள் திமுகவுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.