மதுரை ஆதீனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது: உயர்நீதிமன்றம்!

மதுரை ஆதீனத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

தருமபுரம் ஆதீனம் ஏற்பாட்டில் சென்னை காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற சைவ சிந்தாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த மே 2 ஆம் தேதி மதுரை ஆதீனம் காரில் வந்து கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை – சேலம் ரவுண்டானா பகுதியில் மதுரை ஆதீனத்தின் கார் மீது மற்றொரு கார் மோதி விட்டு நிற்காமல் சென்றதாக மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம், தன்னை திட்டமிட்டே கொலை செய்ய சதி நடந்துள்ளது என்றும், இதில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார். மேலும், விபத்து ஏற்படுத்திய கார் தன்னை நீண்ட தூரம் தொடர்ந்து வந்தது என்றும், தன் கார் மீது மோதிய காரில் வந்தவர்கள் குல்லா அணிந்திருந்தனர் என்றும், முகத்தில் நீண்ட தாடி வைத்திருந்தனர் எனவும் கூறியிருந்தார். அவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இது குறித்து விசாரணை செய்த கள்ளக்குறிச்சி போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அதிவேகமாக காரை ஓட்டி சென்ற ஆதீனத்தின் கார் ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்து ஏற்பட காரணம் என தெரியவந்தது. இந்த விபத்து குறித்து ஆதீனமோ அவரது ஆதரவாளர்களோ காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. மேலும், சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த முபாரக் என்பவரின் கார் மீது, அதிவேகமாக சென்ற ஆதீனத்தின் கார் தான் மோதியது என்பதையும் விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் மதுரை ஆதீனத்தின் பேச்சு இரு மதத்தினருக்கு இடையே குழப்பத்தையும், மத மோதலையும் உருவாக்கும் வகையில் இருப்பதாக கூறி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், ஆதீனத்துக்கு எதிராக தவறான தகவலை பரப்புதல், கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், சமூகத்துக்கு இடையே மோதலை உண்டாக்கும் வகையில் பேசுதல், பொது அமைதிக்கு கேடு விளைவிக்கும் வகையில் பேசுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்றார் மதுரை ஆதீனம். காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நிபந்தனை விதித்து முன் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை ஆதீனத்திடம் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், கார் விபத்து விவகாரத்தை மத ரீதியாக சித்தரித்த விவகாரத்தில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி ஆதீனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மதுரை ஆதீனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதீனத்தின் மனுவுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதி காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.