டிராபிக் மோசமாக இருக்கும்போது ஏன் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம்!

ஒரு சாலையைக் கடக்க 12 மணி நேரம் ஆகும் போது.. சாலை அந்தளவுக்கு மோசமாக இருக்கும் போது மக்கள் ஏன் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நமது நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது சுங்கக் கட்டணம் தான் பெரிய தொல்லையாக இருக்கிறது. சாலை மோசமாக இருந்தாலும் கூட கண்டிப்பாகச் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்துவதாக உள்ளது. மக்கள் பலரும் மோசமான சாலைக்குச் சுங்கக் கட்டணம் ஏன் செலுத்த வேண்டும் எனக் கேள்வி எழுப்புகிறார்கள். இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறித்து உச்ச நீதிமன்றம் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. 12 மணி நேரம் டிராபிக் நெரிசல் இருக்கும்போது பயணிகளிடம் சுங்கக் கட்டணம் வசூலிப்பது ஏன் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் (NHAI) நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான மனுவை விசாரித்தபோது உச்ச நீதிமன்றம் இந்தக் கருத்தைத் தெரிவித்தது.

அதாவது தேசிய நெடுஞ்சாலை 544ல் மண்ணுத்தி- எடப்பள்ளி சாலையில் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படும். அங்குச் சாலையும் மிக மோசமான தரத்தில் இருக்கிறது. இதனால் அந்தச் சாலைக்கு திருச்சூர் மாவட்டம் பாலியேக்கராவில் சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிரான மனுவை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் வினோத் சந்திரன் மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. இந்த விசாரணையின் போது, நீதிபதி சந்திரன் NH 544 சாலையில் ஏற்பட்ட 12 மணி நேர போக்குவரத்து நெரிசல் குறித்து கேள்வி எழுப்பினார்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் ஆஜரான இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “இது கடவுளின் செயல், ஒரு லாரி கவிழ்ந்தது.. அதனால் ஏற்பட்ட டிராபிக் நெரிசலே இதற்குக் காரணம்” என்று பதிலளித்தார். இதற்குப் பதிலளித்த நீதிபதி சந்திரன், “லாரி தானாகக் கவிழவில்லை, அது ஒரு குண்டும் குழியுமான சாலை. இதன் காரணமாகவே கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது” என்று கூறியிருக்கிறார்.

அதற்கு துஷார் மேத்தா, “சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் அங்கு மக்கள் வசதிக்காக சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் பருவமழை இந்தப் பணிகளைப் பாதித்துள்ளது” என்றார். மேலும், சுங்கக் கட்டணத்தை முற்றிலும் ரத்து செய்வதற்குப் பதிலாக, அதைக் குறைத்து வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், இதற்கு முன்பே இதுபோல குறைத்து வசூலிக்க அனுமதித்து நீதிமன்றத் தீர்ப்பு உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், அதை ஏற்க மறுத்த நீதிபதி சந்திரன், “12 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்தச் சாலையில் பயணித்த மக்களுக்கு ஏதேனும் இழப்பீடு வழங்க வேண்டும்.. டிராபிக் நெரிசல் இல்லையென்றால், இந்தத் தூரத்தைக் கடக்க அதிகபட்சமாகவே ஒரு மணி நேரம் தான் ஆகும். டிராபிக் ஓரளவுக்கு இருந்தாலும் 3 மணி நேரம் தான் ஆகும். 12 மணி நேரம் என்பது ரொம்பவே அதிகம்.. எனவே சுங்க கட்டணத்தைக் குறைத்து வசூலிக்கலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று நீதிபதி சந்திரன் விளக்கினார்.

அப்போது தலைமை நீதிபதி பி.ஆர். கவாயும் கிட்டத்தட்ட இதே கருத்தை முன்வைத்தார். ஒரு சாலையை கடக்க 12 மணி நேரம் ஆகும் போது, ஏன் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார். அவர் மேலும், “ஒரு மணி நேரத்தில் பயணிக்க வேண்டிய தூரத்திற்கு 11 மணி நேரம் கூடுதலாக ஆகிறது, அதற்கும் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினார். ஆயினும், இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இந்த விவகாரத்தில் நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளனர். இருப்பினும், மோசமான சாலைக்கு ஏன் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.