திருத்தணி அருகே வரும் 30 ஆம் தேதி மரங்களின் மாநாடு: சீமான்!

திருத்தணி அருகே மரங்களின் மாநாடு நடைபெற உள்ள இடத்தை பார்வையிடச் சென்ற போது மரங்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக, “மரங்களோடு பேசுவோம்! மரங்களுக்காகப் பேசுவோம்!” என்ற தலைப்பில், வருகின்ற ஆகஸ்ட் 30 அன்று திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தில் மரங்களின் மாநாடு நடைபெற உள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த ஜூலை 10 ஆம் தேதி அன்று “மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை” என்ற தலைப்பில் ஆடு மாடுகள் மாநாடு நடத்தினார். இந்த மாநாட்டில் கால்நடைகளின் மேய்ச்சல் உரிமை, இயற்கை விவசாயம், மற்றும் நவீன வேளாண்மையால் உள்ளூர் கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசியிருந்தார். அதற்கு முன்னதாக, பனையேறும் தொழிலாளர்களுக்காக, கள் மீதான தடையை நீக்க கோரி பனை மரத்தில் ஏறி, கள் இறக்கும் போராட்டத்தை நடத்தினார். பின்னர் மேய்ச்சல் நிலத்தை ஆக்கிரமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாடு மேய்க்கும் போராட்டம் நடத்தினார்.

ஆடு-மாடுகள் மாநாட்டைத் தொடர்ந்து, மரங்களின் மாநாடு நடத்த இருக்கிறார் சீமான். ஆகஸ்ட் 30 ஆம் தேதி நடைபெற உள்ள இந்த மாநாட்டில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையேற்க உள்ளார். இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தில், நடைபெற உள்ள மரங்களின் மாநாட்டுக்கான இடத்தை இன்று நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது மரங்களுடன் சீமான் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மரங்களுக்கு முத்தம் கொடுத்து, கட்டி அணைத்தார். அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் சீமான்.

மரங்கள் மாநாடு நடைபெறும் இடத்தைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சீமான், “உலகில் உயிர்வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் மரங்கள்தான் ஜீவாதாரம். மனிதர்களின்றி மரங்கள் உயிர் வாழும். ஆனால் மரங்கள் இல்லாமல், எந்த உயிரினமும் உயிர்வாழ முடியாது” என்றார்.