மசோதாக்களுக்கு எவ்வளவு காலம் ஒப்புதல் வழங்காமல் இருக்க முடியும்?: உச்சநீதிமன்றம்!

மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர்கள், குடியரசுத் தலைவர் முடிவெடுப்பதற்கு காலக்கெடு விதித்து சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கு எதிராக குடியரசுத் தலைவர் 14 திரௌபதி முர்மு 14 கேள்விகளைக் கொண்ட ஒரு விளக்கக் குறிப்பை அளித்திருந்தார். இது தொடர்பான விசாரணையில் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ். நரசிம்மா, மற்றும் ஏ.எஸ். சந்திரசூட் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகியிருந்தார். அப்போது ஆளுநர் மசோதாக்களை நிறைவேற்றாது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்த துஷார் மேத்தா, “ஆளுநர் மசோதாக்களை நிலுவையில் வைத்திருந்தால், அதற்கு அரசியல் தீர்வுகள் உள்ளன. முதலமைச்சர் பிரதமரை அணுகலாம், குடியரசுத் தலைவரை சந்திக்கலாம். பல தூதுக்குழுக்கள் சென்று, நிலுவையில் உள்ள மசோதாக்கள் குறித்து ஆளுநருடன் பேசும்படி கோரலாம். தொலைபேசி மூலமும் தீர்க்கப்படலாம். முதலமைச்சர், பிரதமர், ஆளுநர் ஆகியோர் இணைந்து சந்திக்கும் கூட்டங்கள் மூலமும் இத்தகைய பஞ்சாயத்துகளை தீர்க்கலாம். ஆனால் காலக்கெடுவை நிர்ணயித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அவ்வாறு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா? என்பதே கேள்வியாக இருக்கிறது. பல ஆண்டுகளாக ஒவ்வொரு மாநிலத்திலும் இத்தகைய பிரச்சனைகள் எழுகின்றன. ஆனால் அரசியல் முதிர்ச்சியுடன் கூடிய தலைமை இருக்கும்போது, அவர்கள் மத்திய அரசில் உள்ள அரசியல் சாசன அதிகாரிகளை சந்தித்து, விவாதித்து ஒரு அரசியல் தீர்வை கண்டறிகின்றனர். நாட்டின் ஒவ்வொரு பிரச்சனைக்கும் உச்ச நீதிமன்றத்தில் தீர்வு கிடைக்காது” என்று கறாராக கூறினார்.

இதற்கு பதிலளித்த நீதிபதி சூர்யகாந்த், “ஆளுநரின் செயலற்ற தன்மைக்கு எதிராக, பாதிக்கப்பட்ட மாநிலம் நீதிமன்றத்தை அணுகினால், நீதித்துறை ஆய்வு செய்வதை தடுக்க முடியுமா?” என்று கூறினார். தலைமை நீதிபதி சந்திரசூட், “தவறு இருந்தால் அதற்கு தீர்வு என ஒன்று இருக்க வேண்டும்” என்று கூற, சற்றும் தாமதிக்காமல் “அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த நீதிமன்றமே தீர்வு அல்ல” என்று காட்டமாக பதிலளித்தார்.

இந்த பதிலை எதிர்பார்க்காத தலைமை நீதிபதி “அரசியலமைப்பு பதவியை வகிக்கம் ஒருவர், நியாயமான காரணம் இல்லாமல் தனது கடமையைச் செய்யவில்லை என்றால், இந்த நீதிமன்றம் கையை கட்டி வேடிக்கை பார்க்குமா?” என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த துஷார் மேத்தா, “காலக்கெடுவை நிர்ணயிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு கிடையாது. ஒன்றிரண்டு மாநிலங்களில் மட்டுமே இந்த பிரச்சனை வந்திருக்கிறது. எனவே, இதற்கான தீர்வு நாடாளுமன்றத்தில் இருக்கிறது” என்று கூறியிருந்தார். மேலும், “நீதிமன்றம் அரசியல் சாசன அதிகாரிக்கு ஒருபோதும் உத்தரவிட முடியாது. இதுதான் அரசியல் சாசனத்தின் ஒரு ஒழுக்கமுறை. அரசியலமைப்பில் 31 இடங்களில் காலக்கெடு குறிப்பிடப்பட்டுள்ளன. அரசியலமைப்பை வகுத்தவர்கள் சில செயல்களுக்கு காலக்கெடு அவசியம் என்று கருதியதால் அது அவ்வாறு உள்ளது. எப்போதெல்லாம் காலக்கெடு குறிப்பிடப்படவில்லையோ, அதை வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டதாகக் கருத வேண்டும். அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் சில செயல்பாடுகளுக்கு காலக்கெடு அவசியம் என்றும், சிலவற்றுக்கு தேவையில்லை என்றும் அறிந்திருந்தனர். ஒரு அரசியல் சாசன அதிகாரி மற்ற அரசியல் சாசன அதிகாரிக்கு எவ்வாறு தனது செயல்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று கட்டளையிட முடியாது. நாளை உச்ச நீதிமன்றம் 600 பக்கங்களுக்கு மேல் தீர்ப்புகள் எழுதக்கூடாது என்று பாராளுமன்றம் சட்டம் இயற்ற முடியுமா? ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரணை முடிக்கப்படாவிட்டால், ஒருவர் விடுதலை செய்யப்பட்டதாகக் கருதப்படுவார் என்று பாராளுமன்றம் சட்டம் இயற்ற முடியுமா?” என கேள்விகளை அடுக்கியிருக்கிறார்.