சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை திருப்பி அனுப்பினார் ஆளுநர் ரவி!

தமிழகத்தின் சென்னையில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கும், சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை ஆளுநர் ஆர் என் ரவி திருப்பி அனுப்பியுள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாவில் 4 திருத்தங்கள் செய்யக் கோரி ஆளுநர் ரவி திருப்பி அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மசோதா சட்ட வல்லுனர்கள் மூலம் திருத்தம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறினார்.

சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை ஆளுநர் ஆர் என் ரவி திருப்பி அனுப்பியுள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியதாவது:-

தமிழக பட்ஜெட் அறிவிக்கும் போது சென்னையில் விரைவில் சித்த மருத்துவ பல்கலைக் கழகம் அமையும் என்று அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டது. அந்த தீர்மானத்தில் தமிழ்நாட்டில் ஒரு சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமையப்பட வேண்டும். அதற்கு நிர்வாக அலுவலகம் அமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. மாதவரம் பகுதியில் உள்ள பால்பண்ணைக்கு சொந்தமான இடத்தில், ஒரு 25 ஏக்கர் பரப்பளவில் இந்த சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் ஆர் என் ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆளுநர் ரவி இந்த மசோதாவை ஒரு மாத காலத்திற்கு வைத்து விட்டு பின்னர் திரும்பவும் தமிழ்நாடு அரசுக்கே 25.7.2022 அன்று அனுப்பிவிட்டார். திருப்பி அனுப்பிய உடனேயே அதற்கான காரணங்களை கேட்டாரோ, அதற்கான காரணங்களை சட்ட வல்லுனர்கள் மூலமாக விளக்கி மீண்டும் ஆளுநர் ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் ஆர் என் ரவி, 2022 செப்டம்பர் மாதம் சித்த பல்கலைக்கழக மருத்துவ மசோதாவில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று சொல்லி மீண்டும் தமிழக அரசுக்கு அனுப்பிவிட்டார். அவர் கோரியிருந்த திருத்தங்கள் செய்யப்பட்டு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது. 2025 ஏப்ரல் 26 ஆம் தேதி அன்று இந்த மசோதா திருப்பி அனுப்பப் பட்டது. ஆளுநருக்கு அனுப்பிய பிறகு கடந்த 4 மாதங்களாக கையில் வைத்துவிட்டு, 21.08.2025 அன்று மீண்டும் 4 திருத்தங்களை செய்து மீண்டும் சட்டமன்றத்தில் வைத்து அனுப்புங்கள் என்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு அனுப்பியுள்ளார் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதா சட்ட வல்லுனர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 4 திருத்தங்களை கூறி ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ள இந்த மசோதா சட்ட வல்லுனர்கள் மூலம் திருத்தம் செய்யப்பட உள்ளதாகவும் அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.