4 பேரை தூக்கிலிட்டது மியான்மர் ராணுவ ஆட்சி!

மியான்மர் ராணுவ அரசு, ஐ.நா., உள்ளிட்ட அமைப்புகளின் வேண்டுகோளை நிராகரித்து, முன்னாள் எம்.பி., உட்பட நான்கு பேருக்கு, துாக்கு தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

நம் அண்டை நாடான மியான்மரில், ராணுவம் புரட்சி நடத்தி, ஆங் சன் சூகியின் ஜனநாயக தேசிய லீக் கட்சி தலைமையிலான அரசை, 2021ல் கைப்பற்றியது. அப்போது, ராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டங்கள், இரும்புக் கரம் கொண்டு நசுக்கப்பட்டன.இதைத் தொடர்ந்து, குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நிகழ்த்தியதாக குற்றஞ்சாட்டி, தேசிய லீக் கட்சியின் முன்னாள் எம்.பி., பியோ ஸெயா தாவ் கைது செய்யப்பட்டார். அதுபோல, ஜனநாயக ஆர்வலரான கியாவ் மின் யூ, ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிராக பிரசாரம் செய்ததாகவும் கைது செய்யப்பட்டார். இவர்களுடன், ராணுவத்திற்கு உளவு சொன்ன ஒரு பெண்ணை கொலை செய்த ஹலா மையோ ஆங், ஆங் துரா ஜாவ் ஆகிய நால்வருக்கு, ராணுவ நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்தது. இவர்களின் துாக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும்படி, ஐ.நா., வியட்னாம் தலைமையிலான தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு ஆகியவை, மியான்மர் அரசை வலியுறுத்தின.

அதை ஏற்க மறுத்த ராணுவ அரசு, நேற்று நான்கு பேருக்கும் துாக்கு தண்டனையை நிறைவேற்றியது. மியான்மரில், 1976ல், சலய் டின் மாங் ஊ என்ற மாணவர் தலைவருக்கு, அரசியல் குற்றங்களுக்காக அப்போதைய ராணுவ அரசால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, தற்போது 46 ஆண்டுகளுக்குப் பின், மியான்மரில் நான்கு பேருக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு, ஐ.நா., உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், வியட்னாம் உள்ளிட்ட நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஆங் சான் சூச்சியின் ஜனநாயகக் கட்சி இந்த தண்டனை நிறைவேற்றத்தை கடுமையாக விமர்சித்துள்ளது. தூக்கு தண்டனை ராணுவம் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக காட்டமாக கூறியுள்ளது. முன்னதாக, தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட 4 பேரின் குடும்பத்தினர் சிறைக்கு வெளியே கூடியிருந்ததால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. எனினும், இந்த தண்டனையை எப்போது, எப்படி நிறைவேற்றப்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை.

மியான்மர் ராணுவம் குடும்பத்தினருக்கு தகவல் ஏதும் அளிக்காமல் தூக்குத் தண்டனையை நிறைவேற்றியதற்கு அந்நாட்டு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த 4 பேருக்கும் பொதுமன்னிப்பு அளிக்க கோரி ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. அதை மியான்மரின் ராணுவ ஆட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. ராணுவ அரசின் இந்த செயலுக்கும் கண்டனங்கள் வலுத்துள்ளன. இதையடுத்து, மியான்மர் மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதிக்கக்கூடும் என்றும் சொல்கிறார்கள்.