சீனாவின் பல நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது. தென் கிழக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் வெப்பத்தின் அளவு அதிகமாக உள்ளது.
சீனாவில் சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. கடந்த மாதத்தில் இருந்தே அதிக வெப்பம் பதிவாகி வந்த நிலையில் தற்போது வரலாறு காணாத வகையில் வெப்ப அளவு உள்ளது. ஏற்கனவே சீனாவின் தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதிகளில் நாளை வரை கடுமையான வெப்பம் நிலவும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதே போல் நாட்டின் பல பகுதிகளில் வருகிற 31-ந்தேதி முதல் ஆகஸ்டு 15-ந்தேதி வரை மிக அதிக வெப்பம் பதிவாகும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் சீனாவின் பல நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது. சுமார் 70 நகரங்களுக்கு அதிக வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. கிழக்கு மாகானங்களான ஜெஜி யாங், புஜியனில் 105.8 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. கடும் வெயிலால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் வீடுகளில் ஜன்னல்களை மூடி வைக்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வெளியில் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
வெப்பத்தால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். பகல் நேரங்களில் பல நகரங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. குறிப்பாக தென் கிழக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் வெப்பத்தின் அளவு அதிகமாக உள்ளது. 1873-ம் ஆண்டில் இருந்து சீனாவில் கடந்த மாதம் தொடக்கத்தில் 105.62 டிகிரி வெயில் அடித்தது. தற்போது உச்சப்பட்ச அளவான 105.8 டிகிரி பதிவாகி இருக்கிறது. இது சீனா வரலாற்றில் பதிவான அதிகபட்ச வெயில் அளவாகும். கடுமையான வெப்பம் காரணமாக காட்டுத்தீ ஏற்படக்கூடும் என்று அரசு எச்சரித்துள்ளது.