குரங்கம்மை நோய்க்கு டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பவரியன் நோர்டிக் என்ற மருந்து நிறுவனம் கண்டுபிடித்துள்ள இம்வானெக்ஸ் என்ற தடுப்பூசியை பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றைத் தொடர்ந்து, குரங்கம்மை நோய் உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய், இதுவரை உலகம் முழுவதும் 72 நாடுகளில் பரவி உள்ளது. 16,200 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி, முதுகு வலி ஆகியன குரங்கம்மை நோயின் அறிகுறிகள். முதல் ஐந்து நாட்களுக்கு இது இருக்கும். பின்னர் முகத்தில் தடிப்புகள், உள்ளங்கை, உள்ளங்காலில் தடிப்புகள், வெடிப்புகள் உண்டாகும். இதற்கிடையே, குரங்கம்மை நோயை சர்வதேச மருத்துவ நெருக்கடியாக உலக சுகாதார நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது.
இந்நிலையில், குரங்கம்மை நோய்க்கு டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பவரியன் நோர்டிக் என்ற மருந்து நிறுவனம் கண்டுபிடித்துள்ள இம்வானெக்ஸ் என்ற தடுப்பூசியை பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி அளித்துள்ளது. இம்வானெக்ஸ் தடுப்பூசி ஏற்கனவே பெரியம்மைக்கு எதிராக பயன்பட்டது. அந்த தடுப்பூசியை தற்போது குரங்கம்மைக்கு எதிராக பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. காரணம், குரங்கம்மை வைரசுக்கும், பெரியம்மை வைரசுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தால் நோய்ப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் இதுவரை, நான்கு பேருக்கு குரங்கம்மை நோய் பரவல் கண்டறியப்பட்டு உள்ளது.