நீதி கோரி நடத்தப்பட்ட போராட்டத்தை சாதி போராட்டமாக மாற்ற முயற்சி: வன்னியரசு

மாணவி மரணத்துக்கு நீதி கோரி நடத்தப்பட்ட போராட்டத்தை சாதி போராட்டமாக மாற்ற 60 ஆதிதிராவிட இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் வன்னியரசு குற்றம்சாட்டி இருக்கிறார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் சக்தி இண்டெர்நேஷனல் மெட்ரிக் பள்ளி இயங்கியில் கடந்த 13 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
மாணவி இறப்புக்கு நீதிகோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 300 க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் வன்னியரசு டுவிட்டரில் கூறியுள்ளதாவது:-

மாணவிக்கு நீதி வேண்டும் எனும் கோரிக்கையோடு நடைபெற்ற மக்கள் போராட்டத்தை சாதி போராட்டமாக மாற்ற துடிக்கிறது கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம். ஆதிதிராவிடர்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்கி பள்ளியை பாதுகாக்க துடிக்கிறது. 60 க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளது. இன்னும் தேடுதல் வேட்டையை தொடருகிறது.

பள்ளி நிர்வாகத்தின் உறவினர்கள் மூலமாக ஆதிதிராவிடர் குடியிருப்புக்குள் புகுந்து படித்த மாணவர்களை அடையாளம் காட்டி வருவதாக தம்பிகள் அச்சத்தோடு தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக போராடுவது தவறா? கைது செய்யப்பட்ட ஆதிதிராவிடர் இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஆதிதிராவிடர் குடியிருப்புக்குள் நடத்தப்படும் தேடுதல் வேட்டையை நிறுத்த வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.

முன்னதாக ஆங்கில நாளேடு ஒன்றில் மாணவி மரணத்தின் பின்னணியில் ஆதி திராவிடர்கள் இருப்பதாக உளவுத்துறை வட்டாரங்கள் கூறியதாக செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அதில், “மாணவி கொல்லப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்பதிலிருந்து திசை திருப்பி பள்ளியைத் தாக்கியது யார்? கொளுத்தியது யார்? என்று விவாதத்தை மடைமாற்றிவிட்டு மாணவியின் குடும்பத்திற்கு எதிராகச் சிலர் திட்டமிட்டே செயல்பட்டு வருகின்றனர். அந்தச் சதிக்கும்பலுக்குத் துணைபோகும் வகையில் தற்போது உளவுத்துறையின் நடவடிக்கைகளும் அமைவதாக உள்ளது. இது தொடர்பான ஆங்கில நாளேட்டுச் செய்தி உள்நோக்கத்துடன் கூடியதாக உள்ளது. உளவுத் துறையிலுள்ள சாதிய வாதிகளின் சதியாகவே இது தெரிகிறது. இம்மாதிரியான தகவலை ஊடகத்திற்கு அளித்த உளவுத்துறையினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுக்கு அளித்த இரகசிய தகவல்களை ஊடகத்தில் கசியவிடுவது ஏன்? இத்தகவலே தவறானது. இது ஆதிதிராவிடர் மற்றும் விசிகவுக்கு எதிரான அரசியல் சதியாகும். பள்ளியைக் கொளுத்தியதும் ஆதி திராவிடருக்கெதிராக சாதிய வன்மத்தைக் கக்குவதும் ஸ்ரீமதியின் சாவுக்குக் காரணமானவர்களே என்பதை அறியமுடிகிறது” என்று தெரிவித்து உள்ளார்.