உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்!

கபடி போட்டியின் போது களத்திலேயே உயிரிழந்த விளையாட்டு வீரர் விமல்ராஜ் குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கபடி வீரர் விமல், பண்ருட்டி அடுத்த மானடிக்குப்பம் பகுதியில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் கலந்து கொண்டார். அந்தப் போட்டியின் போது களத்தில் துடிப்புடன் விளையாடிக் கொண்டிருந்த கபடி வீரர் விமல், திடீரென எதிரணி வீரர் வேகமாக பாய்ந்து பிடித்தபோது மயங்கி விழுந்தார். இதையடுத்து கபடி வீரர் விமல் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் களத்திலேயே கபடி வீரர் விமல் உயிரிழந்த விவகாரம் விளையாட்டு வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து களத்தில் உயிரிழந்த கபடி வீரர் விமலுக்கு பல்வேறு தரப்பினரும் ட்விட்டர் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், கபடி வீரர் விமலின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

கடலூர் மாவட்டம் பண்ருட்டி மானடிக்குப்பத்தில் நடைபெற்ற கபடி போட்டியின் போது காடாம்புலியூரைச் சேர்ந்த விமல்ராஜ் என்ற வீரர் மார்பில் அடிபட்டு உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரது குடும்பத்திற்கு இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விமல்ராஜ் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர். கபடிப் போட்டிகளில் பதக்கங்களை வென்றவர். சேலத்தில் பட்டப்படிப்பு படித்து வந்த விமல்ராஜ் தான் அவரது குடும்பத்தின் எதிர்கால நம்பிக்கையாக இருந்தார். அவரது எதிர்பாராத மறைவால் அவரது குடும்பம் நிலைகுலைந்து போயிருக்கிறது. விளையாட்டு வீரர் விமல்ராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இதேபோல் தேமுதிக தலைவர் விஜயகாந்த், கபடி வீரர் விமல்ராஜிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், கபடி வீரர் விமல்ராஜை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் எனவும், குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.