இந்தியாவில் மதவாதம் பெருகியுள்ளது: நிடிலேகா மண்டேலா!

இந்தியா ஒரு இனவெறி நாடாக மாறும் அபாயம் உள்ளது என்று நெல்சன் மண்டேலேவின் பேத்தி நிடிலேகா மண்டேலா தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 18ம் தேதி நெல்சன் மண்டேலா தினமாக கொண்டாடப்பட்டது. அதனையொட்டி ஐக்கிய நாடுகள் சபையில் இளவரசர் ஹாரி பேசும்போது, ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் மீது தாக்குதல் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து பேசிய நெல்சன் மண்டேலாவின் பேத்தியான நிடிலேகா மண்டேலா, உலகம் முழுவதும் ஜனநாயகத்தை ஆதரிக்கும் நாடான இந்தியாவின் ஜனநாயகத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா குறித்து நிடிலேகா மண்டேலா கூறியதாவது:-

நிறவெறிக்கு எதிரான தென்னாப்பிரிக்காவின் போராட்டத்திலும், சிவில் உரிமை இயக்கங்களிலும் கூட ஒரு காலத்தில் குறிப்பிடத்தக்க பங்கை இந்தியா கொண்டிருந்தது. எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா சுதந்திரம் அடைந்தது. அதன் அகிம்சைப் போராட்டம் ஆங்கிலேயர்கள் சுதந்திரம் கொடுக்க நிர்பந்தித்தது. இந்திய சுதந்திரம் மகாத்மா காந்தி, மோதிலால் நேரு, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற மாபெரும் தலைவர்களுக்குப் பின்னால், எந்த இனத்தையும், மதத்தையும் சிறப்புரிமை பெற மறுக்கும் ஒரு முன்மாதிரியை இந்தியா முன்வைத்தது. நிறம், மதம் எதுவாக இருந்தாலும் அனைவருக்கும் சமமான மரியாதையை போதித்தார்கள். இதன் காரணமாக, உலகை மிகவும் கண்ணியமாகவும் ஜனநாயகமாகவும் மாற்ற போராடிய மண்டேலா போன்ற மனிதர்களுக்கு இந்தியா உத்வேகம் அளித்தது.

இந்திய மாதிரி போராட்டம் மிகவும் முக்கியமானது. ஏனென்றால், எனது தாத்தா நெல்சன் மண்டேலா, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை குறிப்பிட்டு, நிறவெறியை எப்படி முடிவுக்கு கொண்டு வரலாம் என்று சிந்தித்துள்ளார். ஆனால் இப்போதைய இந்தியா மதவாத, சகிப்புத்தன்மையற்ற அரசை நாடியிருக்கிறது என்றாலும், 75 ஆண்டுகளுக்கு முன் உலகின் முன் ஜனநாயக மற்றும் பன்மைத்துவ பார்வையை முன்வைத்தது. 75 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியா இப்போது இல்லை. உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக இருந்த இந்தியாவின் ஜனநாயகத்தை இஸ்லாமோபோபியா அரித்து வருகிறது.

இந்தியாவில் கும்பல் வன்முறை, குடியுரிமை பிரச்னை, கலப்பு திருமணங்களுக்கு பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. அதேபோல் தேசிய அளவில் இஸ்லாமியர்கள் அதிக பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் இஸ்லாமோபோபியாவை ஊக்குவிப்பதன் மூலம், மத பிளவுகளை சரி செய்வதற்கான வாய்ப்புகளை இந்தியா இழக்கிறது. இது வரும் காலங்களில், அரசியல் மற்றும் பொருளாதார பிரச்னை ஏற்படும் போது கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும். இஸ்லாமிய வெறுப்பு, ஆபத்தானது என்பதைவிடவும் ஜனநாயகமற்றது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள இஸ்லாமிய வெறுப்பு ஒரு காலத்தில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டை சிதைத்துள்ளது. இவை எல்லாவற்றையும் கடந்து மக்களை நகர்த்தி செல்ல சரியான தலைவர் தேவை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.