ராஷ்டிரபத்னி விவகாரம்: ஆதிர் ரஞ்சன் சுவுத்ரிக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகஸ்டு 3-ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலையிட வேண்டும் எனவும் ஆணையம் வலியுறுத்தல்.

நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள திரவுபதி முர்முவை, ‘ராஷ்டிரபத்னி’ என காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதற்கு எதிராக காங்கிரஸ் நடத்திய போராட்டத்தின் போது அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். ராஷ்டிரபதி பவனுக்கு அணிவகுத்து செல்வது குறித்து பேசிய அவர், ‘ராஷ்டிரபத்னி’ என்று குறிப்பிட்டார். அவரது கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வாய் தவறி அந்த வார்த்தை வந்துவிட்டதாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில், குடியரசுத் தலைவரை அவமதிக்கும் வகையில் பேசிய விவகாரத்தில் காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகஸ்டு 3-ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலையிட வேண்டும் எனவும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வேண்டுமென்றே இவ்வாறு ஜனாதிபதியை அவமதித்திருப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டுகின்றனர். இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறிய கருத்துக்காக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். அதேபோல் விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க வலியுறுத்தியும், எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை திரும்ப பெற வலியுறுதியும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். இதனால் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து மதியம்வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. 12 மணிக்கு பிறகும் அமளி நீடித்ததால் மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்தியில் ஜனாதிபதி “ராஷ்டிரபதி” என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.க.வை சேர்ந்த ஆண் மற்றும் பெண் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே இன்று ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கோர வேண்டும் என அவர்கள் கோஷங்களையும் எழுப்பினர். கைகளில் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும் ஏந்தி இருந்தனர். இந்த போராட்டத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினார்.