எதிர்க்கட்சி, ஆளும் கட்சி உறுப்பினர்கள் கோஷம்: பாராளுமன்றம் ஒத்தி வைப்பு!

விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள். சோனியாகாந்தி மன்னிப்பு கேட்க பாஜக உறுப்பினர்கள் வலியுறுத்தல்.

பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், விலைவாசி உயர்வு, அக்னிபாத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை இரு அவைகளிலும் எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி இதுவரை இரு அவைகளிலும் சேர்த்து 27 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை மக்களவைக் கூடியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் பாஜகவை சேர்ந்த பெண் உறுப்பினர்கள் குரல் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. அப்போது சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருந்த கீர்த்தி சோலங்கி உறுப்பினர்கள் அமைதி காக்குமாறு பலமுறை கேட்டுக் கொண்டார். எனினும் அமளி நீடித்த நிலையில் அவை நடவடிக்கை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவை கூடிய நிலையில் அமளி நீடித்ததால் மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

இதேபோல் மாநிலங்களவையில் விலைவாசி உயர்வு, குஜராத் கள்ளச்சாராய உயிரிழப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். இதற்கு பதிலடியாக குடியரசுத் தலைவர் குறித்து தவறாக பேசிய காங்கிரஸ் உறுப்பினருக்காக சோனியாகாந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக உறுப்பினர்கள் வலியுறுத்தினார். இரு தரப்பும் பதிலுக்கு பதில் கோஷமிட்டதால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டதால் முதலில் நண்பகல் 12 மணி வரையும் பின்னர் நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், திரவுபதி முர்மு குறித்து மககளவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்த ராஷ்டிரபட்னி என்ற வார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி இரானி உள்ளிட்டோர் வலியுறுத்தினர். இந்த பிரச்சினை காரணமாக எதிர்க்கட்சிகளும், ஆளும் கட்சி உறுப்பினர்களும் போட்டு போட்டு கோஷமிட்டதால் பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்றும் முடங்கின.

இந்நிலையில் உள்துறை மந்திரி அமித்ஷா, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அவரது மாளிகையில் சந்தித்து பேசினார். குடியரசுத் தலைவர் அழைப்பின் பேரில் சந்தித்ததாக அவர் கூறியுள்ளார். எனினும் இந்த சந்திப்பின் முழு விபரம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. அவரை தொடர்ந்து மத்திய மந்திரி இரானியும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தார். குடியரசுத் தலைவர் அழைப்பின்பேரில் அவரை சந்தித்தாக இரானியும் குறிப்பிட்டுள்ளார். ஒரே நாளில் மத்திய மந்திரிகள் இருவர் அடுத்தடுத்து குடியரசுத் தலைவரை சந்தித்துள்ளது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குடியரசுத் தலைவரிடம் மன்னிப்பு கோரி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “ராஷ்டிரபத்னி என்கிற வார்த்தை வாய் தவறி வந்த வார்த்ததை என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.