பாஜக தலைவர் அண்ணாமலை அரசியலில் சப்-ஜூனியர்: திருமாவளவன்

பாஜக தலைவர் அண்ணாமலை அரசியலில் ஒரு சப் – ஜூனியர்; அவரோடு விவாதிக்க என் கட்சியில் உள்ள ஒரு சப் – ஜூனியரை அனுப்பி வைக்கிறேன் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த நிரவியில் இயங்கும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் ஒன்றிணைந்து ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல்.திருமவாளவன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று அம்பேத்கர், புத்தர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கல்வி உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை மற்றும் மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை விசிக தலைவர் திருமாவளவன் வழங்கினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசியதாவது:

இயக்குனர் பாக்யராஜின் கருத்து அதிர்ச்சி அளிக்கிறது. அவர் எதையும் நிதானமாக பேசக் கூடியவர். சீர் தூக்கி பேசக் கூடியவர். அவரை யார் இப்படி பேச வைத்தார்கள்? என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து, அம்பேத்கர் வழியில் மோடி செல்கிறார் என்பதை விவாதிக்க பாஜக தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தொல். திருமாவளவன், விளையாட்டு போட்டிகளில் கூட கேட்டகிரி இருக்கிறது. சப் – ஜூனியர், ஜூனியர், சீனியர் என்று இருக்கிறது. அரசியலில் அண்ணாமலை ஒரு சப் – ஜூனியர். அவரோடு விவாதிக்க அவரைப் போல ஒரு சப் – ஜூனியரை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து அனுப்பி வைக்கிறேன் என்று கிண்டலாகத் தெரிவித்தார்.